நகராட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ., ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில், லட்சுமணன் எம்.எல்.ஏ., நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப்பின்நடந்த கூட்டத்தில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைப் பணிகள், சாலை, சுகாதார பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் நகராட்சியில் முதல் கட்டமாக தேர்தலுக்கு முன் 29 கி.மீ., துாரம் 235 சாலைப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில், 130 சாலைகள் நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள 105 சாலைகள் 12 கி.மீ., துாரத்திற்கு நிலுவையில் உள்ளது.

அந்த சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். பாதாள சாக்கடை பிரச்னை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் புகார் வருகிறது. பாதாள சாக்கடை நிரம்பி வழியும் இடங்களை சீரமைக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய இயந்திரங்கள் வாடகைக்கு எடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. புதுச்சேரி சாலையில் உள்ள மின்தகன மேடைக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கிடைத்தவுடன் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

பழைய நகராட்சி அலுவலகம் டவுன் ஹாலாக மாற்றும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. குடிநீர் திட்டப் பணி புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சுத்தமான, சுகாதாரமான நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அப்போது, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி கமிஷனர் ஷியமளா, பொறியாளர் புவனேஸ்வரி, நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா, கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன், சாந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement