2037ல் பயணிப்போர் எண்ணிக்கை 1.2 கோடி!: 'டேக் ஆப்' ஆகும் கோவை ஏர்போர்ட்

1

கோவை: அடுத்த 10 ஆண்டுகளில் கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை 1.2 கோடியாக உயரும் நிலையில், வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகும்.


கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 630 ஏக்கர் நிலம் கையகப்படுத்துதல் பணிகள் முடிந்து, மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பணியாக, கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்திற்கு வேலி, சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சில இடங்களில் பாதை பிரச்னைகள் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


விமானநிலைய ஆணையம், நிதி அயோக் அமைப்புகளின் அனுமதி கிடைத்தவுடன் டெண்டர்கள் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கோவை விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் கூறியதாவது:

விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு மாநில அரசிடமிருந்து பெற்றுள்ளோம் அடுத்த கட்ட விரிவாக்கப்பணி மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் விடப்பட்டு துவக்கப்படும். ரூ.2,200 கோடி செலவில் இப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தற்காலிகமாக சில வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓடுதளம், புதிய நுழைவு வாயில் போன்றவை அமைக்கப்படவுள்ளன.


விரிவாக்கம் செய்யப்படும் விமான நிலையத்தின் நுழைவு வாயில் கிழக்கு பகுதியில், எல்.என் டி பைபாஸ் ரோட்டிற்கு எளிதாக செல்லும் வகையில் அமையும். தற்போதுள்ள பயணிகளுக்கான வசதி இரட்டிப்பாக அமையும். தற்போது 18 விமானங்கள் நிறுத்தும் வசதிஉள்ளது, கூடுதலாக 14 விமானங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். கார் பார்க்கிங் வசதி 20 ஆயிரம் சதுர மீட்டராக உயர்த்தப்படும்.


விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2015ல், 13 லட்சமாக இருந்தது. தற்போது 34 லட்சமாக உயர்ந்துள்ளது. வரும் 2037 ம் ஆண்டில் இது 1.2 கோடியாக உயரும். விரிவாக்கப் பணியின் போது மின்சார தேவைக்காக 68 கிலோவாட் சோலார் மின் உற்பத்தியும் செய்யப்படும். விமான சரக்கு போக்குவரத்து கையாளும் திறன் 15 ஆயிரம் டன்னாக உயர்ந்தள்ளது. விரிவாக்கத்துக்கு பின் 50 ஆயிரம் டன்னாக உயர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement