திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய பணி துவங்குவது எப்போது?: பொதுமக்கள் பாதிப்புக்கு தீர்வு காண கோரிக்கை

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி துவங்காமல் கிடப்பில் இருப்பதற்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து த.வெ.க., அரசு வளர்ச்சி பணி திட்டத்தில் வேகம் காட்ட வேண்டும்.


திருக்கோவிலுார் பழமையான நகரம். இங்கிருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, மதுரை, திருச்சி, பழனி, சேலம், கோயம்புத்துார் என தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடி பஸ் வசதி உள்ளது. தினசரி நுாற்றுக்கணக்கான பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கிறது. மாணவர்களில் துவங்கி பொதுமக்கள் வரை வெளியூர் பயணிக்க குவிவதால் தினந்தோறும் கூட்டம் அலைமோதும்.


மேலும் குறுகிய பஸ் நிலையம் என்பதால் வெளியூர் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல முடியாமல் திக்கி திணறி நேர கட்டுப்பாட்டை கடைபிடிக்க முடியாமல் பல பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் செல்லாமலேயே வேறு வழியில் சென்று விடும் அவலமும் நீடிக்கிறது.



இது பல ஆண்டு காலமாக தொடரும் சம்பவம். எனவே, புதிய பஸ் நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை 30 ஆண்டுகளுக்கு முன்பே முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் இல்லாத காரணத்தால் ஜெ., முதல்வராக இருந்த போது பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது வாகன எண்ணிக்கையின் பெருக்கத்தாலும், வருகை அதிகரிப்பாலும் மாற்று இடத்தில் புதய பஸ் நிலையும் அமைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது.



இதன் காரணமாக கடந்த தி.மு.க., அரசு ஏற்கனவே பஸ் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட தற்போதைய பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகாமையில் இருக்கும் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்து, கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில், ரூ. 22.20 கோடி மதிப்பில், நவீன வசதிகளுடன் பி கிளாஸ் பஸ் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான நிதியை ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பஸ் நிலைய வழிக்கான நில எடுப்பு, நில பரிமாற்றம் என பல கோடி ரூபாய் மதிப்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டது.



பஸ் நிலைய வழிக்கான பகுதியில் இருந்த பெரும்பாலான கடைகள் இடித்து அகற்றப்பட்டு, வழி ஏற்படுத்தப்பட்டு விட்ட நிலையில், ஒரு கடையும், நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டிருக்கும் ஒரு வீடு மட்டுமே அகற்றப்படாமல் உள்ளது. அந்தக் கடை இருக்கும் இடத்திற்கு சொந்தமான கோவில் நிர்வாகம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும், நீர்நிலை புறம்போக்கில் இருக்கும் வீட்டை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதே இப்பிரச்னைக்கு காரணமாக நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.



ஆக்கிரமிப்பு புகார் கொடுத்தால் 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி, அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் ஒழுங்கு நடவடிக்கை அவசியம் இந்த உத்தரவு அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் என ஏற்கனவே சென்னை ஐகோர்ட் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்துள்ளது. இதனை எல்லாம் மதிக்காமல் துறை அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் இருந்து வருகின்றனர்.



இது ஒரு புறம் இருக்க கட்டுமான பணிக்கான டெண்டர் எடுத்த நிறுவனம் பணியை தொடங்க கடந்த ஆட்சியில் காலதாமதம் ஆனதற்கு காரணம் கமிஷன் எனக் கூறப்பட்டது. துறை அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் பஸ் நிலையம் அமைய உள்ள இடப்பகுதியை சேர்ந்தவர்களிடம் கமிஷன் கேட்டு அடம் பிடித்து பணியை காலதாமதப்படுத்தியதாக புகார் எழுந்தது.



இது ஒரு புறம் இருக்க இதே காரணத்தை பின்புலமாக வைத்து பஸ் நிலையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது குறித்து நீதிமன்றம் நேற்று முன்தினம் காட்டமான தீர்ப்பை வழங்கியது.

திட்டங்களை கேள்வி கேட்கும் மேடையாக பொதுநல மனுக்களை தரம் குறைக்க முடியாது. பேருந்து நிலையம் அமையும் இடத்தை அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். 'பொதுநல வழக்குகள் மூலம் வளர்ச்சி பணிகளை முடக்க முடியாது'. திருக்கோயிலுார் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

பஸ் நிலைய பணியை தொடங்க சட்டரீதியாக எந்த தடையும் இல்லாத சூழலில், கமிஷன், கரப்ஷனுக்கு எதிரான ஆயுதத்தை கையில் எடுத்திருக்கும் த.வெ.க., அரசு, பஸ் நிலையம் அமைய முட்டுக்கட்டையாக இருக்கும் ஆக்கிரமிப்பு அகற்றத்தை மேற்கொண்டு, கமிஷன், கரப்ஷனுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நகரின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சுயநலவாதிகளின் கனவை தகர்த்தெறிந்து, பணியை விரைந்து தொடங்கி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement