கிரைம் கார்னர்: கோவை

இருசக்கர வாகனம் திருட்டு டாடாபாத்தை சேர்ந்த சுபாஷ்பாண்டியன், 27 தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தி விட்டு பெங்களூர் சென்றார். நேற்று முன்தினம் பைக் மாயமானதால், ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில், செல்வபுரம் முகமது ஆசான், 24 வாகனத்தை திருடியது உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பணியிடத்தில் விபத்து பெயிண்டர் பலி
ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த பரமேஸ்வரன், 34, கடந்த ஏழு நாட்களாக பீளமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த 13ம் தேதி பணியின் போது தவறி இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் முதியவர் பலி ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் சேகர், 63. இவர் ராபர்ட்சன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த வடவள்ளி ஸ்ரீதரன், 20 மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

போதைப்பொருள் விற்பனை வார இறுதி நாட்களில் போதைப்பொருள் விற்பனை அதிகரிக்கும் என்பதால், போலீசார் சோதனை மேற்கொண்டனர். வி.எச்., ரோடு, உக்கடம், சாய்பாபாகாலனி, துடியலுார், ராமநாதபுரம் பகுதிகளில் அந்தந்த ஸ்டேஷன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த, இரண்டு பெண்கள் உட்பட, ஏழு பேரை கைது செய்தனர்.

கஞ்சா விற்றவர் கைது செல்வபுரம் போலீசார் ரோந்து பணியின் போது, கஞ்சா விற்பனை செய்த சொக்கம்புதுார் நந்தகுமார், 26 என்பவரை கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கோவை, கரும்புக்கடை போலீசார் சாரமேடு பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை விசாரித்தனர். சாரமேடு, திப்பு நகர், இரண்டாவது வீதியை சேர்ந்த முஜிப் ரஹ்மான், 29 என்பதும், விற்பனைக்காக, 1.1 கி.கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், முஜிப் ரஹ்மானை கைது செய்தனர்.

மணல் கடத்தல்; டிரைவர் கைது மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி கணேசன் தலைமையில் குழு, மேட்டுப்பாளையம் ரோட்டில், சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வந்த லாரியை சோதனை செய்ததில், மூன்று யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.லாரியை ஓட்டி வந்த டிரைவர் மாதம்பட்டி கதிர்வேல், 22 கைது செய்யப்பட்டு, லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement