தாவரவியல் பூங்காவில் திருடிய வாலிபர் கைது

புதுச்சேரி: தாவரவியல் பூங்கா கழிவறையில் பித்தளை குழாயை திருடிய விழுப்புரம் நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, பழைய பஸ் நிலையம் அருகே தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. அங்குள்ள கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த பித்தளை குழாய்கள் கடந்த சில தினங்களாக திருடப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் திடீரென கழிவறையில் சத்தம் கேட்டதால், பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டிகள் சரவணன், செல்வராஜ் ஆகியோர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது, வாலிபர் ஒருவர் கழிவறையில் இருந்த பித்தளை குழாய்களை கற்களால் உடைத்து திருட முயற்சி செய்து கொண்டிருந்தார். இதையடுத்து, அவர் பிடித்த செக்யூரிட்டிகள், ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், விழுப்புரம், அவர், அம்மன் கோவில் வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விஜயகுமார், 34, என்பதும், தாவரவியல் பூங்கா கழிவறையில் இருந்து பித்தளை குழாய்களை திருடி சென்று, மது குடித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தாவரவியல் பூங்காவில் பித்தளை குழாய் திருடிதாக விஜயகுமார் மீது போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். 

Advertisement