குப்பை கொட்டும் இடமாக மாறிய ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்

ஸ்ரீபெரும்புதுார்: காவல்கழினி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் கொட்டப்பட்டு வரும் பிளாஸ்டிக், குப்பை கழிவுகளால், நீரோட்டம் தடைபடுவதுடன், ஏரி நீர் மாசடையும் அபாயம் உள்ளது.

குன்றத்துார் ஒன்றியம் வைப்பூர் ஊராட்சி, காவல்கழனி பகுதியில் ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய், பேரீஞ்சம்பாக்கம் செல்லும் சாலையோரம் உள்ளது.

இந்நிலையில், நீர் வரத்து கால்வாய் மற்றும் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில், மர்மநபர்கள் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

கால்வாய் முழுதும் குப்பை கழிவுகள் குவிந்துள்ளதால், மழை காலங்களில் ஏரிக்கு தண்ணீர் செல்வது தடைப்பட்டு, வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், கால்வாயில் உள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஏரியில் கலந்து, தண்ணீர் மாசடையும் நிலை உள்ளது.

எனவே, ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் குப்பை கழிவுகள் கொட்டுபவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement