தமிழக வளர்ச்சிக்கு சென்னையில் 2வது ஏர்போர்ட் கட்டாயம்: தொழில்துறை நிபுணர்கள் வலியுறுத்தல்

12


சென்னை: 'விமான நிலையம் என்பது கட்டமைப்பு திட்டம் மட்டும் அல்ல; தமிழகத்தின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான அத்தியாவசிய முதலீடு. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயம்' என, தொழில்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தை, காலத்திற்கேற்ப விரிவாக்கம் செய்ய முடியாத சூழல் உள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் இரண்டாவது விமான நிலையத்தை, 5,600 ஏக்கரில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. அரசு நிலம் போக, 3,700 ஏக்கர் விவசாய நிலங்கள் எடுக்க திட்டமிடப்பட்டு, இதுவரை, 1,700 ஏக்கர் நிலங்கள் கையகப்பட்டு உள்ளன.


விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஜயின், த.வெ.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், விமான நிலைய பணிகள் தொடருமா, கைவிடப்படுமா, இடம் மாறுமா என்ற குழப்பம் நிலவி வருகிறது.


இந்நிலையில், 'சூப்பர் சென்னை அமைப்பு' சார்பில், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தின் அவசியம் குறித்த கருத்தரங்கம், சென்னையில் நடந்தது. கருத்தரங்கில், நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பணீந்திர ரெட்டி



உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு அடிப்படை விதி உண்டு. இருக்கும் இடத்தின் கொள்ளளவு 75 சதவீதத்தை எட்டும்போது, அடுத்தகட்ட விரிவாக்கத்தைத் தொடங்க வேண்டும்; 90 சதவீதத்தை அடையும்போது, அடுத்த திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.


துரதிர்ஷ்டவசமாக, நாம் அந்த காலக்கெடுவைத் தவறவிட்டுவிட்டோம். ஆனால், இப்போது விழித்துக்கொண்டு, இரண்டாவது விமான நிலையத்திற்கான பணிகளைத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி. இது, அடுத்த 30 ஆண்டுகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும்.

விமான நிறுவன முன்னாள் தலைமை நிதிஅதிகாரி விஜய் கோபாலன்



ஒரு காலத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாகத் இருந்த சென்னை, இன்று போட்டியில் பின்தங்கியுள்ளது. பெங்களூரு போன்ற நகரங்கள், தனியார் நிர்வாகம் மற்றும் நவீன உள்கட்டமைப்பு மூலம், பெரிய ரக விமானங்களைக் கையாளும் வசதியைப் பெற்றுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை, விமானங்களை நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன. விமான நிலைய சீரமைப்பு தற்காலிக தீர்வுதான்;நிரந்தரத் தீர்வல்ல. தமிழக தொழில் வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம்.

கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிரீஷ் பாண்டியன்:



கடந்த 1950களில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி தொடங்கியபோது, விமான நிலையத்திற்கு மிக அருகில் தொழிற்சாலைகள் அமைப்பதையே, தொழில் முனைவோர் விரும்பினர்.

விமான நிலையம் நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்ததால், அருகில் இடங்களை அமைப்பது நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்தது. மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, நாம் பின்தங்கிவிட்டோம்.


பன்னாட்டு நிறுவனங்கள், தமிழகத்தின் தொழில் திறனையும், உழைப்பையும் நன்கு அறிந்துள்ளதால், இங்கு முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். விமான இணைப்பு வசதிகள் சரியாக இல்லாததே, அவர்களை தயங்க வைக்கிறது. இரண்டாவது விமான நிலையம் காலத்தின் கட்டாயம்.

எஸ்.நடேசா அய்யர் லாஜிஸ்டிக் நிறுவன இணை பொது மேலாளர் கிருஷ்ணன்:



நகரின் மையப்பகுதியில் உள்ள விமான நிலையங்களால், எதிர்காலத்தில் இட நெருக்கடி ஏற்படும் என்பதை உணர்ந்து, மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இரண்டாவது விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாம் அந்த வாய்ப்பைத் தவறவிட்டோம். இப்போதாவது விழித்துக்கொண்டு, தொழில் வளர்ச்சிக்கு ஈடு தரும்வகையில், இரண்டாவது விமான நிலையத்தை, தமிழக அரசு விரைந்து அமைக்க வேண்டும்.

இவ்வாறு நிபுணர்கள் வலியுறுத்தினர்.

Advertisement