வீரத்தின் மறுபெயர் மீனாட்சி சுந்தரம்

7


2024 ஆம் ஆண்டு,ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டம்.

பாரத தேசத்தின் தீராத தலைவலியாக விளங்கும் பயங்கரவாதிகள், அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்து கொடூரமான சதிச் செயலில் ஈடுபடப் போவதாக இராணுவத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சற்றும் தாமதிக்காமல் நமது பாதுகாப்புப் படையினர் அந்த வீட்டை அதிரடியாகச் சுற்றி வளைத்தனர். ஆனால், அந்த வீட்டிற்குள் இராணுவத்தினர் எதிர்பார்த்ததை விடவும் மிக அதிக எண்ணிக்கையிலான ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர்.
Latest Tamil News
தாங்கள் நாலாபுறமும் சூழப்பட்டதை உணர்ந்த பயங்கரவாதிகள், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று நவீனத் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர். குண்டுகள் சீறிப்பாய்ந்த அந்தப் பதற்றமான சூழலில், நமது படையின் முன்னணியில் நின்றார் அந்தத் தமிழகத்து சிங்கம்!

தாய்நாட்டின் மீதான பற்று நெஞ்சில் கனலாக எரிய, எதற்கும் அஞ்சாமல் தீரத்துடன் முன்னேறி பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை நோக்கித் தனது துப்பாக்கியால் குறிவைத்துக் சுட்டார் அவர், அவரது சுடுதல் துல்லியமாகப் பாய, ஒரு பயங்கரவாதி அலறியபடி அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தான்.
Latest Tamil News
தங்கள் கூட்டாளி வேரற்ற மரமாய் வீழ்ந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த எஞ்சிய பயங்கரவாதிகள், குண்டுகள் எங்கிருந்து வருகின்றன என்பதை உணர்ந்து, ஒட்டுமொத்தமாக குண்டு வந்த திசையை நோக்கி குண்டுமழை பொழிந்தனர்.

கொடூரமான அந்தத் துப்பாக்கிச் சூட்டில் சீறிவந்த ஒரு குண்டு அவரது முகத்தாடையைப் பெயர்த்துக்கொண்டு பாய்ந்தது! அடுத்த கணமே மற்றொரு குண்டு தோள்பட்டையைத் துளைத்தது!

முகமும், தோளும் குண்டுகளால் கிழிபட்டு, உடல் எங்கும் ரத்தம் ஆறாகக் கொட்டியது. எந்த ஒரு சாதாரண மனிதனும் அந்த வலியின் வேதனையில் சுருண்டு விழுந்திருப்பான். ஆனால்,அவரது உடலில் ஓடியது மாவீரன் கட்டபொம்மனும், மருதுபாண்டியரும் வாழ்ந்த மண்ணின் ரத்தமல்லவா! அவர் சுருண்டுவிடவில்லை; அவரது தேசபக்தி துளிக்கூடத் துவண்டுவிடவில்லை!
Latest Tamil News
வலியைத் தூக்கியெறிந்து, உக்கிரமான வேங்கையாக மாறி, தனது எந்திரத் துப்பாக்கியை படபடவென இயக்கினார். மரணத்தின் விளிம்பிலும் அவர் காட்டிய அந்தப் பேராற்றல் எதிரிகளை நடுங்கச் செய்தது. அடுத்தடுத்து நான்கு பயங்கரவாதிகளைத் தனது துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கி மண்ணைக் கவ்வச் செய்தார்! அவரது இந்த அசாத்திய தீரத்தால் நிலை குலைந்த மொத்த பயங்கரவாதக் கும்பலையும், அதற்குள் பின்னால் வந்த சக வீரர்கள் முழுமையாகச் சுற்றி வளைத்து முறியடித்தனர்.

ஒட்டுமொத்த பயங்கரவாதக் கும்பலின் சதியையும் வேரறுத்து, அவர்களில் 5 பேரைக் கொன்று, தேசத்திற்கு வரவிருந்த பெரும் ஆபத்தைத் தடுத்த மாவீரனாக நின்ற அந்த தீரரின் பெயர் மீனாட்சி சுந்தரம்.

தமிழகத்தில் தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பட்டதாரியான இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு நாட்டின் எல்லையைக் காக்கும் உன்னத லட்சியத்தோடு இராணுவத்தில் சேர்ந்தார். ஜோத்பூர், லே போன்ற மிகக் கடினமான எல்லைப் பகுதிகளில் திறம்படப் பணியாற்றிய இவர், பின்னர் பயங்கரவாதிகளை ஒடுக்கும் சிறப்புப் படைப்பிரிவிற்காகக் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டார்.

அங்கேதான் மேலே விவரிக்கப்பட்ட சம்பவம் நடந்தது,காயங்களுடன் மீட்கப்பட்ட மீனாட்சி சுந்தரம் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குண்டுகளால் சிதைந்த அவரது முகத்தாடையை மறுசீரமைப்பு செய்ய இதுவரை 7 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன! இன்னமும் அவரது முகம் பழைய நிலைக்குத் திரும்பவில்லை, மேலும் 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. அந்தத் தழும்புகள் ஒவ்வொன்றும் அவர் நாட்டுக்காகத் தாங்கிய பதக்கங்கள்!

மீனாட்சி சுந்தரத்தின் இந்த இணையற்ற வீர தீரச் செயலைப் பாராட்டி, இந்தியத் திருநாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான 'கீர்த்தி சக்ரா' விருதினை, டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற கம்பீரமான விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்ற கையோடு தன் சொந்த மண்ணிற்குத் திரும்பிய அந்த நாயகனை, அவரது மனைவி முத்தமிழ்செல்வம், மகள் பவதீர்த்தி மற்றும் ஒட்டுமொத்த காமயகவுண்டன்பட்டி கிராம மக்களும் திரண்டு வந்து, மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் நெகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

மக்களின் இந்த எல்லையற்ற அன்பிற்கு நன்றி கூறி, நெஞ்சை நிமிர்த்தி மீனாட்சி சுந்தரம் முழங்கிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அங்கிருந்த இளைஞர்களின் மனதில் தேசப்பற்றை விதைத்தது.

"குடியரசுத் தலைவர் கைகளால் நான் பெற்ற இந்த 'கீர்த்தி சக்ரா' விருதை, எனது தாய்நாட்டிற்காக நான் செய்த சேவைக்குக் கிடைத்த உன்னத அங்கீகாரமாகக் கருதுகிறேன். நமது நாட்டின் பாதுகாப்பிற்காகப் பாடுபடவும், எல்லையைக் காக்கவும் ஒவ்வொரு இந்திய இளைஞனும் தேசப் பற்றோடு முன்வர வேண்டும்!"என்றார்.


"மாய்வது உடலெனினும் மடியாதது தமிழகத்தின் வீரம் " என்பார்கள். தேசப் பாதுகாப்பிற்காகத் தன் உயிரையே துச்சமென மதித்து, முகத்தில் குண்டடி பட்ட நிலையிலும் அசாத்திய துணிச்சலுடன் எதிரிகளை வீழ்த்திய தமிழக இராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் வீரம், ஒட்டுமொத்த இந்தியாவையும் தலைவணங்கச் செய்துள்ளது.

-எல்.முருகராஜ்.

Advertisement