இங்கிருந்து 35... அங்கிருந்து 15 பேர்...: கண்ணுாரில் இருந்து ஜெட்டா சென்று வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம்
- நமது நிருபர் -
கேரள மாநிலம், கண்ணுாரில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு வெறும் 35 பயணியருடன், 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் இயக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் 90 சதவீதம் தேவை இருந்தும், இங்கிருந்து இயக்க விமான நிறுவனங்கள் முன்வராமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'ஏர் இந்தியா' குழுமத்தின் குறைந்த கட்டண விமான நிறுவனமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளது. அதன் சார்பில், நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கேரள மாநிலம், கண்ணுாரில் இருந்து சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகருக்கு, வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, கடந்த 9ம் தேதி கண்ணுாரில் இருந்து காலை 6:30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஜெட்டா புறப்பட்டது. இதில் பயணிக்க வெறும் 35 பயணியர் மட்டுமே இருந்தனர். பொதுவாக பயணியர் வருகை குறைந்தால், விமான நிறுவனங்கள் அதை காரணம் கூறி விமானத்தை ரத்து செய்யும்.
வழக்கத்துக்கு மாறாக இந்த விமானம் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது. அங்கிருந்து அதே விமானம் வெறும் 15 பேருடன் கண்ணுாருக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அதிகளவில் விமான எரிபொருள் செலவு ஏற்பட்டுள்ள சூழலிலும், சொற்ப அளவிலான பயணியரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஏற்றிச் சென்றுள்ளது.
ஆனால், தமிழகத்தில் கடந்த கொரோனா தொற்று காலத்தில் இருந்தே ஜெட்டா நகருக்கு சேவை இல்லை. தமிழர்கள் இன்றும் இணைப்பு விமானம் வாயிலாகவே அங்கிருந்து சென்னை அல்லது திருச்சி வருகின்றனர். சொற்ப அளவிலான பயணியருக்கு விமானங்களை இயக்க, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முன்வரும்போது, தமிழகத்தில் இருந்து விமானங்களை இயக்க ஏன் மனம் வரவில்லை என, விமான போக்குவரத்து துறை வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
கண்ணுாரில் இருந்து ஜெட்டாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கிய விமானம், 'போயிங் 737' வகையைச் சேர்ந்தது. இதில், 185 பயணியர் வரை பயணிக்க முடியும். கண்ணுாரில் இருந்து ஜெட்டாவுக்கு செல்ல ஆறு மணி நேரமாகும். விமான எரிபொருள் செலவு தோராயமாக 50 லட்சம் ரூபாய் வரை வரும்.
இது தவிர்த்து, 'லேண்டிங்' கட்டணம், வான்வெளி கட்டணம், விமான பணியாளர் கட்டணம் என, 60 லட்சம் ரூபாயை தாண்டும். இது போன்ற சூழலில், எந்த விமான நிறுவனமும் விமானத்தை இயக்காது. அதையும் தாண்டி இந்நிறுவனம் நஷ்டத்தில் இயக்கியுள்ளது.
கண்ணுாரில் இருந்து 90 சதவீதம் பயணியர் வருகை இருப்பதில்லை. தமிழகத்தில் இருந்து இயக்கினால் அவர்களுக்கு லாபம் தான். ஆனால், நாங்கள் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை; தமிழகத்தில் இருந்து விமானங்களை இயக்க மாட்டோம் என ஏர் இந்தியா குழுமம் பிடிவாதமாக இருக்கிறது.
எனவே, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்; தமிழக அரசும் அழுத்தம் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமையகத்தில் விசாரித்தபோது, 'குறிப்பிட்ட சில விமான சேவைகள் மட்டுமே இருப்பதால், பயணியர் நலன் கருதி விமானம் இயக்கப்பட்டது. தமிழக பயணியர் எதிர்பார்க்கும் சேவைகளை வழங்க, நெட்வொர்க் குழுவை மேம்படுத்தி வருகிறோம்' என்றனர்.
மேலும்
-
நொய்யல் குறுக்கே பாலம் பணி விரைவுபடுத்த உத்தரவு
-
விளையாட்டு// தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் சென்னை சவுமியாவுக்கு ‘வெள்ளி’
-
விளையாட்டு// மாநில மகளிர் கிரிக்கெட் 221 ரன் வித்தியாசத்தில் செங்கல்பட்டு அணி வெற்றி
-
அயநல்லுார் கிராமத்தில் வீடு, கோவிலில் திருட்டு
-
கூடலுார் ஏரியில் மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை
-
சிற்றுந்து -மீது- பேருந்து மோதி 4 பேர் படுகாயம்; பைக் நாசம்