காங்கிரஸ் கட்சி முதுகில் குத்தி விடும்; முதல்வர் விஜய் ஏமாந்து விடக்கூடாது: அர்ஜூன் சம்பத்

தஞ்சாவூர்; காங்கிரஸ் கட்சி முதுகில் குத்துகிற கட்சி என்பதால், முதல்வர் விஜய் ஏமாந்து விடக்கூடாது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திராவிட மாடல் அரசு, மத்திய அரசோடு, மோதல் போக்கை கடைபிடித்ததால், தமிழகத்தின் பல வளர்ச்சி திட்டங்கள் தடைபட்டது.

தற்போது, எம்.ஜி.ஆர்., பாணியில், மத்திய அரசுடன் இணக்கமான போக்கில், செயல்படுவோம் என முதல்வர் விஜய் தெரிவித்து இருப்பதை வரவேற்கிறோம். நிதி ஆயோக் கூட்டத்தில், அரைச்ச மாவையே முதல்வர் விஜய் அரைத்துள்ளார். நீட் விலக்கு குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் கேட்ககூடாது, சுப்ரீம் கோர்டில் தான் கேட்க வேண்டும்.

பிரசாத ஸ்டால் விவகாரத்தில் அறநிலைத்துறை அமைச்சரின் செயல் பாராட்டக்குரியது. இதில், பிரசாத ஒப்பந்தக்காரர்கள் சுமார் இரண்டு லட்சம் பேரின் வாழ்வாதாரம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அமைச்சர் நடவடிக்கைளை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் உள்ளது. அமைச்சராக காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர். காவிரி பிரச்னைக்கு காரணமே காங்கிரஸ் கட்சி தான். எனவே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி,கர்நாடக முதல்வர் சிவகுமார், இந்த விரோத போக்கை கடைபிடிக்கிறார்கள். காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி அரசு எந்த காலத்திலும் அரசியல் செய்யவில்லை. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் காவேரி ஆணையம் அமைக்கப்பட்டது.

அணைக்கட்ட மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசு ஏற்கனவே பலமுறை அனுமதியை மறுத்துள்ளது. ஆனால், கர்நாடக முதல்வர் சிவகுமார் இதை ஒரு அரசியலாக மாற்றி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் வகையில் நடந்துக்கொள்ளுகிறார்.

தமிழக நலன்களுக்கு எதிரான காவிரி, இலங்கை தமிழர் பிரச்னை போன்ற விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இருந்தது. தி.மு.க., முதுகில், காங்கிரஸ் குத்தும், காங்கிரஸ் தி.மு.க., முதுகில் குத்தும். எப்போதும், காங்கிரஸ் கட்சி முதுகில் குத்துகிற கட்சி என்பதால், முதல்வர் விஜய் ஏமாந்து விடக்கூடாது. தி.மு.க.,தமிழக வெற்றிக்கழகம் காங்கிரஸ் கட்சினரால் வஞ்சிக்கப்பட்டு விடக்கூடாது. மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஏமாறாமல் முதல்வர் விஜய் செயல்பட வேண்டும்.

விஜய் அரசு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என முயற்சிக்கிறார்கள். ஆறு மாதம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனாலும், திராவிட மாடல் 2.0 மாதிரி சில நடவடிக்கைகள் உள்ளது. 2028ம் ஆண்டு மகாமக திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளை இப்போது இருந்தே மேற்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி இந்த தேசிய திருவிழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement