மாற்றுத்திறனாளிகள் ‘வலி’ உணராத அதிகாரிகள்

திருப்பூர், ஜூன் 13–

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது புதிய அடையாள அட்டை கோரியும், பழைய அட்டையைப் புதுப்பிக்கவும் மாவட்டம் முழுவதிலும் இருந்து 112 மாற்றுத்திறனாளிகள் தங்கள் பெற்றோருடனும், துணைகளுடனும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முகாமிற்கு வந்திருந்தனர். கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், எலும்புமுறிவு மற்றும் நரம்பியல் துறை சார்ந்த நிபுணத்துவ மருத்துவர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதித்து, அவர்களின் பாதிப்பு குறித்த மருத்துவச் சான்றுகளை வழங்கினர்.



இணையதளம் முடக்கம்

மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஒருங்கிணைந்த அடையாள அட்டையைப் பெறுவதற்கு, மத்திய அரசின் ‘யு.டி.ஐ.டி.’ என்ற பிரத்யேக இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இம்முகாமிலேயே மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மருத்துவச் சான்றுகள் மற்றும் உரிய ஆவணங்களைப் பெற்று, தனி அலுவலர்கள் மூலம் ஆன்லைனில் உடனுக்குடன் பதிவு செய்து கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இந்த யு.டி.ஐ.டி. இணையதளம் கடந்த மூன்று நாட்களாகவே முற்றிலும் முடங்கிக் கிடந்தது. நேற்றும் முகாம் நடந்தபோது இந்தத் தளம் செயல்படவில்லை.



முன்னறிவிப்பு இல்லை

இணையதளப் பக்கம் கடந்த மூன்று நாட்களாக முடங்கியிருந்த விவரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும், முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இதுகுறித்த எந்தவொரு முன்னறிவிப்பையும் செய்யவில்லை. இதனால், கிராமப்புறங்களில் இருந்து வாடகை ஆட்டோக்களைப் பிடித்துக் கொண்டும், பஸ்களில் கடும் சிரமங்களுக்கு இடையே பயணித்தும் கலெக்டர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளிகள், பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டு இறுதியில் ஏமாற்றமடைந்தனர்.



அதிகாரிகள் சமாதானம்



இணையதளச் சேவை இல்லாததால் மருத்துவப் பரிசோதனை முடிந்தும் மாற்றுத்திறனாளிகளால் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பும் நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஆவணங்களை மட்டும் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், தற்போது சர்வர் கோளாறாக உள்ளது. இணையதளம் சீரானதும் நாங்களே ஆன்லைனில் விண்ணப்பித்து, அடையாள அட்டையை உங்கள் வீடு தேடி வந்து வழங்குவோம் எனக் கூறி சமாதானப்படுத்தி அவர்களைத் திருப்பி அனுப்பினர்.

–––

2 படங்கள்



திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது; காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்.



@block_B@ ஏமாற்றமே மிஞ்சியது தன் மாற்றுத்திறனாளி மனைவியை அட்டைப் பதிவுக்காக அழைத்து வந்திருந்த கணவர் கூறுகையில், என் மனைவிக்கு அடையாள அட்டை வாங்கக் கடந்த மூன்று நாட்களாகக் கலெக்டர் அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சர்வர் கோளாறு என்று கூறி திருப்பி அனுப்புகிறார்கள். நேற்றும் ஏமாற்றமே மிஞ்சியது. எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளையும், அவர்களைச் சார்ந்திருப்பவர்களையும் இப்படி அலைக்கழிப்பது பெரும் மன உளைச்சலைத் தருகிறது. அதிகாரிகள் முன்னரே தகவல் சொல்லியிருந்தால் இந்த வீண் அலைச்சலையும், பண விரயத்தையும் தவிர்த்திருக்கலாம் என வேதனையுடன் தெரிவித்தார்.block_B

Advertisement