பிரேசில் சவால் ஆரம்பம் * இன்று மொராக்கோவுடன் மோதல்
நியூ ஜெர்சி: உலக கோப்பை அரங்கில் 5 முறை சாம்பியனான பிரேசில், இன்று தனது முதல் போட்டியில் மொராக்கோவை எதிர்கொள்கிறது.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
உலகத் தரவரிசையில் பிரேசில் அணி 6வது இடத்தில் உள்ளது. 'சி' பிரிவில் ஹைதி, மொராக்கோ, ஸ்காட்லாந்துடன் இடம் பெற்றுள்ளது. இன்று அமெரிக்காவின் மெட்லைப் மைதானத்தில் நடக்கும் போட்டியில், பிரேசில் அணி, 7வது இடத்திலுள்ள மொராக்கோவை சந்திக்கிறது.
மார்குய்னாஸ் தலைமையில் உலகின் சிறந்த மத்திய கள, தற்காப்பு வீரர்களை கொண்டுள்ள அணியாக உருவெடுத்துள்ளது பிரேசில். முன்கள வீரர்கள் எஸ்தவாவோ, ரோட்ரிகோ காயத்தால் விலகிய நிலையில், முன்னணி வீரர் ராபினா, காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியது பலம். முன்னணி வீரர்களில் ஒருவரான 25 வயது வினிசியஸ் ஜூனியர் அசத்தலாம். நெய்மர் இல்லாத நிலையில் மதியாஸ் குனா தாக்குலுக்கு கைகொடுக்கலாம்.
முன்கள வீரர்களாக கேபிரியல் மார்டினெல்லி, இகோர் தியாகோ, ரேயன், லுாயிஸ் ஹென்ரிக், மத்திய களத்தில் பேபினோ, லுாகாஸ் பாகுயட்டா, கோல்கீப்பர்கள் அலிசன், எடர்சன், வேவர்டன் என நட்சத்திர படையுடன் உள்ளது பிரேசில்.
ஏழாவது வாய்ப்பு
உலக கோப்பை அரங்கில் மொராக்கோ, 7வது முறையாக பங்கேற்கிறது. மத்திய கள வீரரான பிராஹிம் தியாஸ், செயல்பாட்டுக்கு ஏற்ப அணியின் வெற்றி முடிவாகும். அஜெடின் அவுனாஹி, கோல் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும், 'ரைட் பேக்' வீரர் அக்ரப் ஹகிமி அசத்தலாம்.
வருவாரா நெய்மர்
பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களில் முதலிடத்தில் (79 கோல்) உள்ளார் நெய்மர், 34. சரியான 'பிட்னஸ்' இல்லாமல் தவிக்கிறார். சமீபத்தில் இவருக்கு கெண்டைக்கால் காயம் ஏற்பட்டது.
இருப்பினும் 26 பேர் கொண்ட பிரேசில் அணியில் சேர்க்கப்பட்டார். பயிற்சி போட்டிகளில் பங்கேற்கவில்லை. நேற்றும், சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை. இவர், மொராக்கோ அணிக்கு எதிராக இன்று களமிறங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 முறை
உருகுவேயில் 1930ல் நடந்த முதல் உலக கோப்பை தொடரில் களமிறங்கியது பிரேசில். தற்போது 2026 வரை, அனைத்து தொடரில் பங்கேற்ற ஒரே அணி பிரேசில். இம்முறை 23 வது முறையாக பங்கேற்கிறது.
24 ஆண்டில்...
பிரேசில் அணி 1970ல் கோப்பை வென்றது. அடுத்த 24 ஆண்டில் மீண்டும் கோப்பை (1994) வென்றது. கடைசியாக 2002ல் சாம்பியன் ஆனது. தற்போது 24 ஆண்டு ஆன நிலையில் மீண்டும் சாதிக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
76 வெற்றி
உலக கோப்பை அரங்கில் அதிக வெற்றி பெற்ற அணி பிரேசில். இதுவரை 114 போட்டியில், 76 வெற்றி, 19 'டிரா', 19 தோல்வியை பெற்றுள்ளது. இதில் 232 கோல் அடித்துள்ளது.
சம பலத்தில்...
பிரேசில், மொராக்கோ அணிகள் 1998 உலக கோப்பை தொடரில் மோதின. இதில் பிரேசில் 3-0 என வென்றது. அடுத்து 2023ல் நடந்த நட்பு போட்டியில் மொராக்கோ வெற்றி பெற, சம பலத்தில் உள்ளன.
மேலும்
-
விசாரணை கைதிகள் மரணத்தை தவிர்க்க போலீசாருக்கு கட்டுப்பாடு
-
'ஹார்ட் டிஸ்க்'குகள் திருட்டு; 3 தனிப்படைகள் அமைப்பு
-
மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்ட ஆசிரியர் குழு
-
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் த.வெ.க., நிர்வாகி கைது
-
டூவீலரில் இருந்து தவறி விழுந்த குழந்தை மீது கார் ஏறி பலி: தப்பியோடிய டிரைவர் கைது
-
லாரி டிரைவர் வெட்டிக்கொலை