பூந்தமல்லியில் 794 நாய்களுக்கு கருத்தடை
பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சியில் உள்ள சாலைகளில் நடந்து செல்வோரை தெருநாய்கள் அடிக்கடி கடிப்பதால், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர், தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், ‘ப்ளு கிராஸ்’ அமைப்புடன் இணைந்து, ஓராண்டாக நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, ரேபிஸ் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யும் பணிகளை செய்து வருகின்றனர்.
பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பூந்தமல்லி நகராட்சியில் இரண்டு நாட்களில், 29 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளோம். ஓராண்டில் மட்டும் பூந்தமல்லி நகராட்சியில், 1,650 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளோம். 794 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளோம். பூந்தமல்லியில் தெருநாய்களை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.