40 நாட்களாகியும் வராத ஊராட்சி பராமரிப்பு நிதியால் அவதி: குடிநீர் லைன்களை கூட சரி செய்ய முடியாது தத்தளிப்பு
குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு நிதி இன்னும் வராததால் வறட்சி காலத்தில் குடிநீர் பணிகளை கூட செய்ய முடியவில்லை என ஊராட்சி நிர்வாகத்தினர் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் ஊராட்சிகளின் பராமரிப்பு பணிகளுக்காக மாநில நிதிக்குழு மானிய நிதியை ஒவ்வொரு மாதமும் அரசு வழங்கி வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்படும் இந்த நிதியை கொண்டு தான் ஊராட்சிகளில் குடிநீர் பைப்லைன், மின்மோட்டார், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது கடும் வறட்சி நீடிக்கும் நிலையில் குடிநீர் பைப்லைன்களை பராமரிப்பதற்கு இந்த நிதி அவசியமானதாக உள்ளது. ஆனால் 40 நாட்களாகியும் மே மாதத்திற்கான நிதி இதுவரை வழங்கப்படவில்லை. சில ஆண்டுகளாகவே ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானிய நிதி குறைத்து தான் வழங்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே சிரமப்படும் நிலையில் நிதி வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் அத்தியாவசிய குடிநீர் பைப்லைன் பராமரிப்பு பணிகளை கூட செய்ய முடியவில்லை, மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புவதால் வெளியே தலைகாட்ட முடியவில்லை என ஊராட்சி நிர்வாகிகள் குமுறுகின்றனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாவது கடந்த காலங்களை போல் இல்லாமல் ஊராட்சிகளுக்கு போதுமான பராமரிப்பு நிதியை முறையாக ஒதுக்க வேண்டும். அவற்றை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
---------
நிதியை விரைந்து வழங்குங்க
தற்போது கடும் வறட்சி நீடித்து வரும் நிலையில் ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தலை துாக்கி உள்ளது. குறிப்பாக ஆர்.கோம்பை ஊராட்சி தாசமநாயக்கன்பட்டி, சின்னழகு நாயக்கனுார் காலனி, மேற்கு மெத்தைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இவ்வளவு முக்கியமான காலத்தில் ஊராட்சிகளுக்கு வந்து சேர வேண்டிய மாநில நிதிக்குழு மானிய நிதியை முறையாக அனுப்பினால் தான் ஊராட்சி நிர்வாகங்கள் செயல்பட முடியும். மக்களின் குடிநீர் பிரச்னைகள் தீரும். எனவே தமிழக அரசு ஊராட்சிகளுக்கான பராமரிப்பு நிதியை முறையாக, விரைந்து வழங்க வேண்டும்.
- வி.தர்மர், சமூக ஆர்வலர், சின்னழகு நாயக்கனுார் ஊராட்சி, ஆர்.கோம்பை.
............
மேலும்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்
-
கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் விஜய் 1.6 கிலோ வெள்ளி வாள் வழங்கி தரிசனம்
-
த.வெ.க.,வுக்கு தாவிய அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ.,க்களுக்கு 'நோட்டீஸ்'