'சொல்வதை செய்யாதது தான் வாக்குறுதியா?' த.வெ.க., அரசுக்கு விவசாயிகள் கேள்வி

பவானி:தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அனைத்து வகை வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.



விதிமுறை பெயரில் விவசாயிகள் பயன் பெறாத வகையில் செய்யப்பட்ட அறிவிப்பை திரும்ப பெற்று, முழு அளவிலான விவசாயிகள் பயன் பெறும்படி, அரசு வேளாண் கடனை தள்ளுபடி செய்து, த.வெ.க., அரசு அறிவிக்க வலியுறுத்தி, சித்தோட்டில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை முன், தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் துரைசாமி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.


இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் விளக்கேத்தி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன், அச்சங்க விவசாயிகள், உறுப்பினர்கள், விளக்கேத்தி, காகம், குலவிளக்கு பஞ்., பகுதி விவசாயிகள், விவசாயி கண்ணுசாமி தலைமையில், முழுமையான கடன் தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

22 முதல் உண்ணாவிரதம்


தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:

த.வெ.க., தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு பயிர் கடன்கள், 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு, 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தது.
ஆனால் ஆட்சி அமைந்ததும், 90 சதவீத விவசாயிகள் பயன் பெறாத வகையில், பயிர் கடன் தள்ளுபடி என அறிவித்துள்ளது. வாக்குறுதிப்படி அனைத்து வகை பயிர் கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
வரும், 22ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement