பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த திமுக 'மாஜி'க்கள் மீது நடவடிக்கை?

10

- நமது நிருபர் -

தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்தது குறித்து ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் அளித்த அறிக்கையில், 'பினாமி பெயரில் 'கான்ட்ராக்ட்' எடுத்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக, தி.மு.க.,வில் அமைக்கப்பட்ட 19 கள ஆய்வு குழுக்களில், 13 குழுக்கள் அறிக்கை அளித்துள்ளன; மற்ற குழுக்கள் அவகாசம் கேட்டுள்ளன. சென்னையில் மட்டும் 10,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

3,000 பக்க அறிக்கையில், குழுக்கள் அளித்த சில பரிந்துரைகள்:




* வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதோடு, உட்கட்சி பிரச்னையை தொடர விடாமல், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பகுதிகளில் அரசு 'கான்ட்ராக்ட்' பணிகளை, பினாமி பெயரிலும், சிண்டிகேட் அமைத்தும் எடுத்துள்ளனர். அவர்கள் யார் என்பதை பட்டி யலிட்டுள்ளோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஒன்றிய செயலர்களிடம் தேர்தல் பணிக்காக வழங்கிய பணத்தை சுருட்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க தயங்கினால், அதே தவறுகள் தொடரும் வாய்ப்புள்ளது

* இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்கும் ஒன்றிய செயலர்களை மாற்ற வேண்டும்.

* சத்துணவு பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர் நியமனங்களுக்கு, கட்சியினர் பரிந்துரையை நிராகரித்த மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி சாட்டையை சுழற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் உற்சாகமாக பணியாற்றும் வகையில் கட்சியை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement