விபத்தில் தொழிலாளி பலி மக்கள் ரோடு மறியல்
சிவகாசி: சிவகாசி அருகே ஜீப் மோதி கூலி தொழிலாளி பலியானார். இப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
சிவகாசி பேராபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கண்ணன் 55. இவர் அருகேயுள்ள மயிலாடுதுறை பகுதியில் ரோட்டை கடக்க முயன்ற போது வந்த ஜீப் எதிர்பாராத விதமாக கண்ணன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை பஸ் ஸ்டாப்பில் அடிக்கடி வாகன விபத்து நடைபெறுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும், அங்குள்ள அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் போராட்டம் நடந்த நிலையில் போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சிவகாசி கிழக்குப் போலீசார் விசாரிக்கின்றனர்.