இன்ஜினியரிங் கனவை நனவாக்கும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி கோலாகலம்: கடலுாரில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு 

கடலுார்: கடலுாரில் 'தினமலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள் விரைவில் துவங்க உள்ளன. இன்ஜினியரிங் படிப்பில் நுாற்றுக்கணக்கான கல்லுாரிகளும், எக்கச்சக்கமான புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவுகளும் கொட்டிக்கிடக்கும் இச்சூழலில் எந்த படிப்பை தேர்வு செய்தால் சிறந்த எதிர்காலம் கிடைக்கும்.

எந்த கல்லுாரி நமது திறமைக்கு தீனி போடும் என்ற குழப்பமும், பதற்றமும் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே இயல்பாகவே எழுந்துள்ளது. மாணவர்களின் இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் எதிர்கால கனவுக்கு சரியான பாதையை உருவாக்க 'தினமலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி -2026 என்ற பிரம்மாண்ட ஆலோசனை கருத்தரங்கை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றன.

அந்த அடிப்படையில் கடலுார் டவுன் ஹாலில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 10:00 மணிக்கு கருத்தரங்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 8:30 மணி முதலே மாணவ, மாணவிகள் விழா அரங்கிற்குள் பெற்றோருடன் ஆர்வமாக வரத் துவங்கினர்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருஷோத்தமன், கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் மகேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கினர்.

மாணவர்களுக்கு விருப்பமான கல்லுாரிகள், விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது, இந்தாண்டு அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள் என்ன, புரொவிஷனல் அலாட்மென்ட் பெறும் வரை கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் எவை என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. கட் ஆப் மதிப்பெண்ணுக்கும், மாநில தரவரிசைக்கும் எந்தெந்த கல்லுாரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதை புரிந்து கொண்டு யதார்த்தனமான முறையில் கல்லுாரிகளை தேர்வு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தனர். செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி போன்ற நவீனபடிப்புகளின் எதிர்காலம் என்ன, மெக்கானிக்கல், சிவில், இ.இ.இ.,-இ.சி.இ., போன்ற கோர் படிப்புகளுக்கு தற்போதைய உலகளாவிய சந்தையில் உள்ள டிமாண்ட் என்ன என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. கடலுார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் அரங்கம் முழுதும் அமர்ந்து தங்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்களிடம் விளக்கங்களை கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டனர்.

Advertisement