ஆபத்தான சாலை வளைவு பகுதியில்  மின் விளக்குகள் இன்மையால் ‘அச்சம்’  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோட்டைமேடு அருகே ஆபத்தான வளைவில் உள்ள தடுப்பு கட்டடையில், மின் விளக்குகள் அமைக்காததால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கல்லுாரி வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பல்வேறு உபயோகங்களுக்காக கார், பைக் போன்ற வாகனங்களில் வந்து செல்கின்றனர். 

வாகன போக்குவரத்து மிகுதியான சங்கராபுரம் சாலை குறுகியதாக இருந்ததால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி நகரிலிருந்து ரோடுமாமந்துார் வரை சாலை அகலப்படுத்தப்பட்டு நடுவே தடுப்பு கட்டை அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து ஓராண்டுக்கு  மேலாகியும், தடுப்பு கட்டையில் இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது.

கோட்டைமேடு அருகே உள்ள வளைவு பகுதியில் உள்ள தடுப்பு கட்டை மிகவும் ஆபத்தான வகையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பலர் அப்பகுதியை கடக்கும் போது அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும், மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த காணப்படுகிறது. இரவு நேரங்களில் அதிவேகமாக வளைவு பகுதியை கடக்கும்போது அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. 

மின் விளக்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்குள் அப்பகுதியில் மின் விளக்குள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Advertisement