விதிமீறல் கட்டட விவகாரத்தில் அரசுக்கு தேவை... துணிச்சல்! வரன்முறை திட்டத்திற்கு வருமா முற்றுப்புள்ளி?

- நமது நிருபர் -

'விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்யும் கலாசாரத்தை ஒழிக்க, புதிய அரசு துணிச்சலுடன் செயல்பட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, நகரமைப்பு வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்துள்ளன. இதில் அதிகபட்ச விதிமீறல் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும் என, பல்வேறு வழக்குகளில், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

இந்த உத்தரவுகளை செயல்படுத்த, முந்தைய தி.மு.க., - அ.தி.மு.க., அரசுகள் விரும்பவில்லை. இதனால், குறைந்தபட்ச விதிமீறல் உள்ள கட்டடங்களை வரன்முறை செய்துவிட்டு, அதிக விதிமீறல் உள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக, நீதிமன்றத்தில் தெரிவித்தன.

இதற்காக, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தில், '113 சி' என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. அதன் அடிப்படையில், விதிமீறல் கட்டட வரன்முறை திட்டம், 2017ல் அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

கடந்த, 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டுமே, இதற்கு தகுதி பெறும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. தமிழகம் முழுதும் இதற்கான விண்ணப்பங்கள், 2019 வரை பெறப்பட்டன.

இத்திட்டத்தில், 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இதில் விண்ணப்ப பதிவு கட்டணமாக மட்டுமே, 60 கோடி ரூபாய் வரை வசூலானது. ஆனால், இத்திட்டம் தொடர்பாக, சில தனி நபர்கள் வழக்குகள் தொடர்ந்ததால், இத்திட்டம் பாதியில் முடங்கியது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டன.

இது தொடர்பான வழக்கில், உரிய பதில் அளித்து முடிக்க வேண்டிய தமிழக அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளாக மவுனமாக இருந்துவிட்டது. இதனால், விதிமீறல் கட்டடங்கள், அதே நிலையில் தொடர்கின்றன.

ஏமாற்று வேலை இது குறித்து, நகரமைப்பு வல்லுனர் ஒருவர் கூறியதாவது:

பிற மாநிலங்களில், விதிமீறல் கட்டடங்களை இடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில், விதிமீறல் கட்டடங்கள் பிரச்னை எழுந்தபோது, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதை சமாளிக்கும் வகையில், 2000ம் ஆண்டு அப்போதைய தி.மு.க., அரசு, வரன்முறை திட்டத்தை அறிவித்தது. இதில் காணப்பட்ட குளறுபடிகளை, உயர் நீதிமன்றம் கண்டித்தது. இதனால், இத்திட்டம் பாதியில் முடங்கியது.

சென்னை பெருநகர் பகுதியில் மட்டும், 1.5 லட்சம் கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன. சென்னையில், 1,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கினால், அதற்கு மாறாக, 1,500 வீடுகள் கட்டப்படுகின்றன.

இதேபோன்று, புதிதாக மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களில், 20 சதவீதம் எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்படுவதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் கடந்த கால் நுாற்றாண்டு காலமாக, ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறி மாறி ஆட்சியில் இருந்த இரண்டு கட்சிகளும், இதில் அதிகபட்ச விதிமீறல் செய்த நிறுவனங்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டன.

விதிகளை மீறினால், வரன்முறை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம், மக்களிடம் பரவி உள்ளது. எனவே, தற்போது அமைந்துள்ள அரசு, லஞ்ச ஊழலுக்கு வழிவகுக்கும் வரன்முறை திட்டத்தை கைவிட்டு, விதிகளை மீறினால் இடிப்பு என அறிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கை அவசியம் கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:

தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை அப்பட்டமாக மீறிய கட்டடங்களை இடித்து தள்ள வேண்டும்.

அதே நேரம், தற்போது அமலில் உள்ள கட்டட விதிகளுடன் ஒப்பிட்டு பார்த்து, மிக குறைந்தபட்ச விதிமீறல்கள் உள்ள சிறிய குடியிருப்புகள், தனி வீடுகளை மட்டும் வரன்முறை செய்ய வேண்டும்.

இதற்கான பணிகளை, இணைய வழியில் தானியங்கி முறையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் குறிப்பிட்ட தொகை அரசுக்கு வருவாயாக கிடைக்கும்.

தமிழக அரசின் தற்போதைய கடன் மற்றும் சமூக நல திட்டங்களை கருத்தில் வைத்து, புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை பெருநகரில் விதிமீறல் கட்டடங்களால், மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அரசின் திட்டங்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வருக்கு விரிவான விளக்க அறிக்கை அளிக்க உள்ளோம். முதல்வர் முடிவு அடிப்படையில், இதில் அதிரடி நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


@block_B@ சட்ட விரோத திருமண மண்டபங்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?


வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் திருமணங்கள் நடந்த நிலையில், தற்போது தனி திருமண மண்டபம் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 38 திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், கோவிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் 500 சதுர அடி வரை உள்ள 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், உரிய அனுமதி இன்றி சிறிய திருமண மண்டபங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த குறுகிய இடங்களில் நுாற்றுக்கணக்கானோர் கூடுவதால், அவசர வெளியேறும் வசதிகள் இல்லை. தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழும் பெறப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், வணிகப் பயன்பாட்டுக்கான சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணங்கள் செலுத்தப்படாமல் குடியிருப்பு விகிதத்திலேயே வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளன. திருமண நிகழ்ச்சிகளுக்கு வரும் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. விதிமீறல் கட்டடங்களுக்கு மாநகராட்சி 'நோட்டீஸ்' அனுப்பினாலும், உள்ளூர் அரசியல் செல்வாக்கால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இந்த சட்டவிரோத மினி திருமண மண்டபங்களுக்கு, 'சீல்' வைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.block_B

Advertisement