இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்; காலனித்துவ ஆட்சி கால மரபுகள் நீக்கம்

27


புதுடில்லி: காலனித்துவ ஆட்சி கால மரபுகளை நீக்கி புதிய சீருடைகளை ராணுவ வீரர்களுக்கு நம் ராணுவம் அறிமுகம் செய்துள்ளது.

திருத்தப்பட்ட சீருடை விதிமுறைகள் அடங்கிய 'ராணுவ சீருடைகள் - 2026' என்ற 174 பக்க கையேட்டை நம் ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. காலனித்துவ கால நடைமுறைகள், கலைச்சொற்கள் மற்றும் அவசியமற்ற அலங்காரக் கூறுகளை நீக்கும் வகையிலான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ராணுவத்தின் செழுமையான மரபுகள் மற்றும் தொழில்முறைத் தரநிலைகளை பேணும் வகையில் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட விதிமுறைகளுக்கு மாற்றாக இது வந்துள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்:

* நம் ராணுவத்தில் உள்ள '3 ஏ' எனப்படும் பிரிட்டன் ராணுவ உயர் அதிகாரிகள் அணியும் குளிர்கால உடைக்கு மாற்றாக பாரம்பரிய பாண்டி ஜாக்கெட் சேர்க்கப்படுகிறது. பழைய உடை 2029ம் ஆண்டு ஜூன் 30 ல் முழுமையாக பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.

* புதிய விதிமுறைப்படி ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு பொதுவான எண் முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

* நம் ராணுவத்தில் விழாக்கால சீருடை, பணியின் போது அணியும் உடை, உணவக சீருடை, போர்க்கால சீருடை என நான்கு வகையான உடைகள் புழக்கத்தில் உள்ளன.

* உணவக உடை எண் 5 மற்றும் 6 ல் உள்ள பவுச் பெல்ட்டை நீக்குவது, விரும்பினால் வாளை எடுத்துச் செல்லுதல், 'ராயல்' போன்ற சொற்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவது போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* பணியில் இருக்கும் ​​வீரர்கள் பச்சை குத்திக்கொள்வதோ, காது, மூக்குகளில் ஆபரணங்கள் அணிவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

* பெண் அதிகாரிகள் ​​கணுக்கால் அளவுக்கு பேன்ட் மற்றும் துப்பட்டாவுடன் புடவைகள் அல்லது சல்வார் அணியலாம். அதே நேரம் பொட்டு வைப்பதும், உதட்டு சாயம் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

Advertisement