இந்திய பெண்கள் ஏமாற்றம்: தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது

மான்செஸ்டர்: இந்திய பெண்கள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து, வேல்சில், பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த 'ஏ' பிரிவு போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இது, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பங்கேற்ற 200வது சர்வதேச போட்டி. இம்மைல்கல்லை எட்டிய முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் ஹர்மன்பிரீத்.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (17) சுமாரான துவக்கம் தந்தார். ஷைபாலி வர்மா (31) நம்பிக்கை தந்தார். யஸ்திகா பாட்யா (15), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (12) நிலைக்கவில்லை. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (24), தீப்தி சர்மா (29) ஓரளவு கைகொடுத்தனர். ரிச்சா கோஷ் (15) ஆறுதல் தந்தார். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்தது
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு தஸ்மின் பிரிட்ஸ் (40), மரிசான் காப் (81*) கைகொடுக்க, 19.1 ஓவரில் 161/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 3 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement