குராசோ - ஈகுவடார் 'டிரா': உலக கோப்பை கால்பந்தில் 'விறுவிறு'

கன்சாஸ் சிட்டி: அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் நடந்த 'இ' பிரிவு லீக் போட்டியில் ஈகுவடார், குராசோ அணிகள் மோதின. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால், முதல் வெற்றிக்காக களமிறங்கின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில் முதல் புள்ளியை பெற்றது குராசோ.

இப்போட்டியில் கோல்கீப்பராக அசத்திய குராசோ அணியின் எலாய் ரூம், ஈகுவடார் அணியின் 15 கோல் அடிக்கும் வாய்ப்புகளை தடுத்தார். உலக கோப்பை வரலாற்றில், ஒரு போட்டியில் அதிக முறை எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட 2வது கோல்கீப்பரானார் எலாய் ரூம் 37. ஏற்கனவே 2014ல் (ஜூலை 1) பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்காவின் டிம் ஹோவர்ட் 16 முறை தடுத்திருந்தார்.

இம்முறை, கேப் வெர்டே அணியின் கோல்கீப்பர் வோசின்யா 40, பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 கோல் வாய்ப்புகளை தடுத்தார்.


'ஆயிரத்தில்' அசத்திய ஜப்பான்

மான்டேரி: மெக்சிகோவின் மான்டேரி நகரில் நடந்த 'எப்' பிரிவு லீக் போட்டியில் ஜப்பான், துனிசியா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜப்பான் சார்பில் அயாசே உவேடா 2 (31, 83வது நிமிடம்), டைச்சி கமடா (4வது), ஜுன்யா இடோ (69வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.

நெதர்லாந்துக்கு எதிராக 'டிரா' செய்த ஜப்பான் அணி, முதல் வெற்றியை பதிவு செய்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஏற்கனவே சுவீடனிடம் வீழ்ந்த துனிசியா அணி, தொடர்ந்து 2வது தோல்வியை பெற்று, 'நாக்-அவுட்' சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.


இப்போட்டி, உலக கோப்பை கால்பந்து வரலாற்றின் 1000வது போட்டியானது. கடந்த 1930ல் உருகுவேயில் நடந்த முதல் சீசனில், பிரான்ஸ்-மெக்சிகோ அணிகள் முதல் போட்டியில் (ஜூலை 13) விளையாடின. அதன்பின் 1954ல் 100வது (ஆஸ்திரியா-உருகுவே, ஜூலை 3), 1990ல் 500வது (செக்கோஸ்லோவாகியா-கோஸ்டா ரிகா, ஜூன் 23), 2018ல் 900வது (பிரான்ஸ்-குரோஷியா, ஜூலை 15) போட்டிகள் நடந்தன.

Advertisement