மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களை கண்காணிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை

தேனி:மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

புகார்கள் பற்றி போலீசார் கூறியதாவது, கடந்த சில நாட்களாக அரசு அலுவலகங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்க அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் அதிகம் வருகின்றன. இதனால் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் லஞ்சம் கேட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 1100 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். அல்லது dvaccam@tn.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார்களை அனுப்பலாம். புகாரின் உண்மை தன்மை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement