லெபனான் மீது குண்டுவீச்சு: இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டிப்பு
வாஷிங்டன்: லெபனான் மீது குண்டுவீசிய இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இது அமைதியை ஏற்படுத்தும் முயற்சியை கெடுத்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து ஆக உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தியிருக்கக்கூடாது. குறிப்பாக ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் நெருங்கும் நிலையில், இது நடந்திருக்கக்கூடாது.
அச்சுறுத்தலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், அந்த தாக்குதல் சிறியதாகவும் , அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்போ, காயமோ இல்லை. முக்கியமான நடவடிக்கையை பாதிக்கும் வகையில் ஏதும் இல்லை.
லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் அமைதி ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. லெபனானில் இனி எந்த இடத்திலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்தக்கூடாது. நீண்ட மற்றும் அமைதிக்கான துவக்கமாக அமையலாம். அதனை வீணடித்து விடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.