கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் விரிவாக்கம்  செய்த இடத்தில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் அவதி  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. 

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நான்கு முனை சந்திப்பில் டிரான்ஸ்பார்மர்கள் அகற்றி வாகனங்கள் எளிதில் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த இடத்தில் டிராபிக் ஸ்டேஷன் கட்டப்பட்டதுடன் தள்ளு வண்டிகள் மற்றும் தேவையற்ற பந்தல்கள் அமைத்து தேவையின்ற ஆக்கிரமிக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

கள்ளக்குறிச்சி நகர பகுதியின் மையமான நான்கு முனை சந்திப்பு மிக குறுகலாக இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. நான்கு முனை சந்திப்பையொட்டி, பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், அரசு பெண்கள் பள்ளி ஆகியன இருப்பதால் இந்த சந்திப்பு எப்போதும் வாகன நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இருந்த பள்ளியின் மதில்சுவரினை மாற்றி, மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அப்பகுதியில் டிராபிக் ஸ்டேஷன் கட்டப்பட்டதுடன், போக்குவரத்து போலீசார் தாராளமான நடவடிக்கையால் அதனருகில் பந்தல்கள் அமைத்து, தள்ளு வண்டி கடைக்காரர்கள் கடைகளை பரப்பி ஆக்கிரமிப்பை தொடர்கின்றனர். 

இதனால் நகரின் முக்கிய பகுதியான நான்கு முனை சந்திப்பில், கரும்பு வாகனங்கள், பள்ளி வாகனங்கள், அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கு முடியாமல் அவதிப்பட்டு, தினசரி நெரிசலில் சிக்கி தவிக்கிறது. போலீசாரின் மெத்தன போக்கினால் விரிவாக்கம் செய்த இடத்தில் போக்குவரத்து அல்லாத பயன்பாட்டிற்கான இடமாக மாற்றப்பட்டு வருகின்றது. 

எனவே நான்கு முனை சந்திப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று நகரின் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி விரிவாக்கம் செய்து கள்ளக்குறிச்சியில் வாகன நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Advertisement