சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!



மனைவி பிரிந்து சென்ற நிலையில், மகளை தனியாளாக வளர்த்து வரும், கோவையை சேர்ந்த செந்தில்குமார்:

திருமணமாகி ஆறு ஆண்டுகள் நானும், மனைவியும் நன்றாக வாழ்ந்தோம். திடீரென எங்களுக்குள் பிரச்னைகள் தலைதுாக்கின. மனைவி விவாகரத்து கேட்டார். குழந்தையின் எதிர்காலத்தை மனதில் வைத்து மறுத்து விட்டேன். இதனால், என்னை பிரிந்து சென்றார்.

எப்படியாவது சரிசெய்துவிட முடியுமா என்று யோசித்து கொண்டிருந்த வேளையில், மாமியார் வீட்டில் என் மனைவிக்கு வேறு திருமணம் செய்து வைக்கும் யோசனையில் இருந்ததால், விவாகரத்திற்கு சம்மதித்தேன்.

பிறந்தது முதல் என் மகள் என்னிடம் மிகவும் ஒட்டுதலாக இருப்பாள். மனைவி என்னை விட்டு பிரியும்போது, மகள் 3 வயது குழந்தை. 7 வயது வரை எங்களிடம் மாறி மாறி இருந்தாள். பிரிவதென முடிவானதும், ‘தாயிடமே குழந்தை வளரட்டும்’ என நீதிமன்றம் கூறியது.

ஆனால், ‘பெண் குழந்தைகளுக்கு அப்பாவின் பாசமும், அரவணைப்பும் முக்கியம். அதனால், அப்பாவிடமே குழந்தை இருக்கட்டும்’ என்று என் முன்னாள் மனைவி கூறி விட்டார். நீதிமன்ற தரப்பிலும் குழந்தையிடம் கேட்டதற்கு, ‘அப்பாவிடமே செல்கிறேன்’ என்று என்னுடனே வந்துவிட்டாள்.

மகளை, என் அம்மாவும், தங்கையும் கவனமாக பார்த்துக் கொள்கின்றனர். நான் விற்பனை பிரிவு துறையில் வேலை பார்ப்பதால், பெரும்பாலும் வெளியூரில் தான் இருப்பேன். இப்போது, அவளே தனியாக இருக்கும் அளவுக்கு பழக்கி உள்ளேன். வீட்டை சுற்றி, ‘சிசிடிவி கேமரா’ பொருத்தி உள்ளதால், நான் எங்கு இருந்தாலும் மகளை பார்த்துக் கொள்கிறேன்.

குழந்தைகளுக்கு நம் பிரச்னைகள் புரியும்; எது சரி, எது தவறு என்றும் தெரியும். குறிப்பிட்ட வயது வரை அவர்களின் உடல், மன ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டாலே, அவர்கள் நல்லபடியாக வளர்ந்து விடுவர். என் மகளுக்கு நான் தாயுமானவன் என சொல்வதை விட, என் மகள் எனக்கு தாயுமானவள் என கூறுவதுதான் சரியாக இருக்கும்.

பணி நிமித்தமாக நான் வெளியூர் சென்றிருந்தால், என் மகள் மொபைல் போனில் என்னை அழைத்து, நான் சாப்பிட்டேனா, தண்ணீர் குடித்தேனா, இரவு துாங்கினேனா என்று அக்கறையுடன் விசாரிப்பாள்.

பிரச்னை காரணமாக பிரியும் முடிவில் உள்ள தம்பதிக்கு நான் சொல்வது ஒன்று தான்... குழந்தை உங்களிடம் இருப்பதாலோ, உங்கள் துணைவர் குறித்து குழந்தை மனதில் நஞ்சை விதைத்து வெறுக்க வைப்பதாலோ நீங்கள் ஜெயித்து விட்டதாக அர்த்தம் இல்லை. சேர்ந்து வாழாவிட்டாலும், சிறந்த பெற்றோராக இருப்பதில் தான் உங்கள் வெற்றி உள்ளது.

***

Advertisement