கடலில் மாயமான 3 மீனவர்களை மீட்க கோரி குடும்பத்தினர்கள் மனு 

கடலுார்: பரங்கிப்பேட்டை கடலில் மாயமான 3 மீனவர்களை மீட்க கோரி, குடும்பத்தினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கிள்ளையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி கீதா அளித்த மனு: எனது கணவர் கல்யாணசுந்தரம், 56; கடலுார் அடுத்த சோனகஞ்சாவடி ஸ்ரீகாந்த், 24; பரங்கிப்பேட்டை பாண்டியன், 56; ஆகியோர் கடந்த 15ம் தேதி அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மறுநாள் வெகுநேரமாகியும் கரை திரும்பவில்லை. இது குறித்து மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மீனவர்கள், மீன்பிடி படகுகள், கடலோர காவல் படையின் கப்பல், ஹெலிகாப்டர் உதவியுடன் கடந்த ஒரு வாரமாக தேடுதல் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மாயமான மீனவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இதனால், குடும்பத்தினர் சோகத்தில் உள்ளோம். எனவே, மீட்பு பணியை துரிதப்படுத்தி 3 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement