நெய்வேலி வழியாக சென்னைக்கு ரயில்கள்  இயக்கப்படுமா?: 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு

மந்தாரக்குப்பம்: நெய்வேலி வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலுார் - விருத்தாசலம் ரயில் பாதையில் நெய்வேலி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இவ்வழியாக கடலுார் - சேலம், கடலுார் - திருச்சி, காரைக்கால் - பெங்களுரு ரயில்கள் சென்று வருகின்றன. நெய்வேலி வழியாக சென்னைக்கு நேரடி அல்லது தனி ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது நெய்வேலியுள்ள பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

நெய்வேலி, வடலுார், குறிஞ்சிப்பாடி பகுதி மக்கள் சென்னை செல்ல வேண்டுமானால், விருத்தாசலம் , கடலுார் அல்லது விழுப்புரம் சென்று அங்கிருந்து சென்னைக்கு ரயில்கள் மூலம் செல்ல வேண்டும். தற்போது கடலுார் மற்றும் விருத்தாசலம் வழியாகச் செல்லும் இயங்கும் ரயில்களில் கூட்ட நெரிசலால் பயணிகள், வணிகர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கடலுார் மாவட்டத்திலிருந்து பல ஆயிரம் பேர் தொழில், கல்வி, வியாபாரம், வேலை வாய்ப்புக்காக சென்னையில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். திருநெல்வேலி, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் இருந்து வரும் ரயில்கள் கடலுார், விருத்தாசலம் வழியாகச் செல்லும் போது பயணிகளுக்கு இடவசதி தட்டுப்பாடு ஏற்படுகிறது. முன்பதிவு இடங்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால், நெய்வேலி என்.எல்.சி., தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் நலன் கருதி, நெய்வேலி - சென்னை இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என தொழிற்சங்க அமைப்புகள் தென்னக ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சேலம் - விருத்தாசலம் - கடலுார் துறைமுகம் வரையிலான 190 கி.மீ., துார இருப்புப்பாதை மின்மயமாக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. நெய்வேலி ரயில் நிலையம் மின்சார பாதையாக மேம்படுத்தப்பட்டுள்ளதால் சென்னைக்கு ரயில்களை இயக்குவதற்கான தொழில்நுட்ப ரீதியான வழிமுறைகள் உள்ளது. எனவே, நெய்வேலி, வடலுார் பகுதி மக்கள் சென்னை செல்ல ஏதுவாக நெய்வேலி வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என கடலுார் எம்.பி., சார்பில் பார்லிமெண்டிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மாநில தலைநகரான சென்னையிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாக ரயில் இயக்கப்படுகிறது. ஆனால் கடலுார் மாவட்டத்திற்கு தனியாக ரயில் இயக்கப்படவில்லை. எனவே பயணிகள் நலன் கருதி தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக கடலுாரிலிருந்து குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலுார், நெய்வேலி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெங்கைகொண்டான், வடக்குவெள்ளுர், மேல்பாதி, பெரியாக்குறிச்சி,கீழ்பாதி, சேப்ளாநத்தம்,ஊமங்கலம், அரசக்குழி,பழையநெய்வேலி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement