புதுச்சேரியில் தேசிய பாரம்பரிய நடன விழா பாரம்பரிய கலைகள் சங்கமத்தால் உற்சாகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பிஸ்வநாத் சங்கீதாலயா சார்பில் 'லாஸ்ய லாவண்யா' -2026 எனும் தலைப்பில், தேசிய பாரம்பரிய நடன விழா வைத்திக்குப்பம் அரோதன் கிரீட்டீஷ்ரேயா கார்டனில் நடந்தது.

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த விழாவில், ஒடிசி, பரதநாட்டியம் மற்றும் கதக் போன்ற பாரம்பரிய கலைகளின் சங்கமம் அரங்கேறியது. பிரெஞ்சு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் டாக்டர் மார்கெரிட்டா ட்ரெண்டோ, குச்சிப்புடி குரு ராகினி ஸ்ரீநிவாஸ் மற்றும் அரோதன் கலைக்கூடத்தின் நிறுவனர் லலித் வர்மா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவங்கி வைத்தனர்.

ஒடிசி நடனங்கள்: மீரா நடன அகாதமியின் இயக்குநர் சங்கீதா தாஷ், 'லட்சுமி மங்கள சரணம்' மற்றும் நடங்கி பாணியிலான அபிநயங்களை வழங்கினார். மேலும், மஹிதாஸ்ரீ மற்றும் தபோமக்னா ஆகியோரின் ஒடிசி அபிநயமும் நடைபெற்றது.

பரதநாட்டியம்:சுமதி காளிதிண்டி மற்றும் அரோத்யுதி தத்தா ஆகியோர் இணைந்து அனுமன் சாலீசாவைப் மையமாகக் கொண்ட பரதநாட்டிய நடனத்தை வழங்கினர்.

விழாவின் இறுதி நிகழ்வாக ராமாயண காவியத்தை மையமாகக் கொண்ட 'நமாமி ராமம்' எனும் பிரம்மாண்ட ஒடிசி நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. இதில் வில் வளைத்தது முதல், ராவண வதம் வரையிலான பயணத்தை, ஒடிசாவின் கலை மரபோடு பிணைத்த நிகழ்ச்ச நடந்தது. கவுரவிப்பு

கலைப் பயணத்தின் துாதுவர்களாகத் திகழ்ந்த நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை கவுரவப்படுத்தப்பட்டனர். புதுச்சேரியின் பண்பாட்டின் வேர்களைப் போற்றும் திருவிழாவாக லாஸ்ய லாவண்யா நிறைவு பெற்றது. பிஸ்வநாத் சங்கீதாலயா தலைவர் பிரபுல்லா குமார் ரே, செயலாளர் தீப்தி ரவுத்ரே, இயக்குநர் பிரதீப் ரே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Advertisement