வேண்டவராசி அம்மனுக்கு கும்பாபிஷேகம் பாண்டூரில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
கூடுவாஞ்சேரி:பாண்டூர், வேண்டவராசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இவ்விழாவில் 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகா, பெருமாட்டுநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட, பாண்டூர் கிராமத்தில், சுயம்புவாக எழுந்தருளிய வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது.
பனைமரத்தை தல விருட்சமாக கொண்டுள்ள வேண்டவராசி அம்மன் கோவிலுக்கு, 40 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், 2024ம் ஆண்டு, பாண்டூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து, கோவிலை புனரமைக்க முடிவெடுத்தனர்.
அதன்படி, 3.5 கோடி ரூபாய் மதிப்பில், முருகன், வள்ளி - தெய்வானை, சிவன் - பார்வதி, ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீகிருஷ்ணர், காசியம்மன், கங்கையம்மன், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகிய பரிவார தெய்வ விக்ரஹகங்களுடன் கோவில் பரப்பு விஸ்தரிக்கப்பட்டது.
அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்த நிலையில், 21ம் தேதி காலை 7:00 மணிக்கு கிராம சாந்தி வழிபாட்டுடன், கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின.
கடந்த 22ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, சுதர்சன ஹோமம், சவுபாக்ய ஹோமங்கள், புண்ணியாகவாசனம், யாகசாலை, அலங்காரம் நடத்தப்பட்டது. பின், 23ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலை 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜைகளும் தொடங்கின.
தொடர்ந்து, நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, பிரதான ஹோம குண்டலத்தில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து காலை 6:15 மணிக்கு மேல் மஹா பூர்ணா ஹூதி, காலை 6:25 மணிக்கு மேல் யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு நடைபெற, காலை 6:30 மணிக்கு மேல் அனைத்து விமானங்கள், பரிவார தெய்வங்கள் மற்றும் மூலவர் வேண்டவராசி அம்மனுக்கு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதை சுற்றியுள்ள 20,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அம்மனையும், பரிவார தெய்வங்களையும் தரிசித்தனர். இன்று முதல் 48 நாட்களுக்கு, தினமும் மாலை மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை பட்டாபிராமன், வினோத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கிராம மக்களும் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.
மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்