ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
ஒட்டாவா: ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்புக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்று 40 ஆண்டுகளுக்குப் பின் கனடா உளவுத்துறை அதிகாரிகள் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 1985ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ஏர் இந்தியா விமானம் மாண்ட்ரியலில் இருந்து லண்டன் வழியாக டில்லிக்கு வந்து கொண்டிருந்தது. பயணிகளின் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, அட்லாண்டிக் பெருங்கடலின் மேல் விமானம் பறந்து கொண்டிருந்த போது வெடித்தது. இதில் 329 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்தனர். தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரால் கடலில் இருந்து 131 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
1984ம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குள் இருந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் புளூ ஸ்டார்' நடவடிக்கைக்குப் பழிவாங்கும் வகையில், காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது என்று கனடா விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம், இந்தியா-கனடா உறவுகளில் ஒரு பெரிய விரிசலுக்கான காரணமாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்புக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்று கனடா உளவுத்துறை அதிகாரிகள் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கனடா உளவுத்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
1985ல் கனடாவை தளமாகக் கொண்டு செயல்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் கனடா நாட்டவர்கள். இது கனடாவின் வரலாற்றிலேயே மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாகும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இத கண்டுபிடிச்சி அறிவிக்க கனடாவிற்கு 40 வருஷம் ஆயிடுச்சி. சரி, அப்போ பிரிவினை கோரும் காலிஸ்தான் இயக்கத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் என அறிவிக்க வேண்டியதுதானே.