செங்கை புறநகர் பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படும் அமைச்சர் ராஜ்குமார்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புற நகர் பேருந்து நிலையம், அடுத்த மாதம் திறக்கப்படும் என, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு அடுத்த, மலையடிவேண்பாக்கம் கிராமத்தில் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சொந்தமான 9.45 ஏக்கர் நிலத்தில், செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்கு வரத்து கழக பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இப்பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, சென்னை புறநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின், 131 கோடி ரூபாய் மதிப்பில், புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளிட்ட பல்வேறு பணிகளை, அப்போதைய முதல்வர் ஸ்டாலின், 2024ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

அதைதொடர்ந்து அனைத்து பணிகளும், கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தன. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், புறநகர் பேருந்து நிலையம் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, அமைச்சர் ராஜ்குமார், புதிதாக கட்டப்பட்டுள்ள புறநகர் பேருந்து நிலையத்தை நேற்று, ஆய்வு செய்தார்.

அமைச்சர் ராஜ்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையத்தில் பல்வேறு பணிகள் முழுமை அடையாமல் உள்ளன. அனைத்து பணிகளும் முடிந்து அடுத்த மாதம் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement