அரை குறையாய் நிற்கும் சென்டர்மீடியன் அமைக்கும் பணி தொடரும் விபத்து அபாயம்
தேனி, ஜூன் 27-பழனிசெட்டிபட்டியில் சென்டர் மீடியன் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை கிடப்பில் போட்டுள்ளதால் விதிமீறி ரோட்டை கடப்பவர்களால் விபத்துக்கள் தொடர்கிறது.
தேனியில் கம்பம் ரோட்டில் பழனிசெட்டிபட்டி, மதுரை ரோட்டில் கருவேல்நாயக்கன்பட்டி, கலெக்டர் அலுவலகம் அருகே உயரம் குறைந்த சென்டர் மீடியன்கள் உள்ளன. இப் பகுதியில் வாகனங்களில் செல்வோர், உரிய சமிக்கை காட்டாமல் திரும்பினர். இதனால் விபத்திற்குள்ளாகின்றனர். விபத்துக்களை தடுக்க சாலை பாதுகாப்பு நிதியில் ரூ. 80 லட்சத்தில் சென்டர் மீடியன்கள் உயரத்தை அதிகரிக்கும் பணி கடந்த மார்ச்சில் நடந்தது. பழனிசெட்டிபட்டி முதல் போடி விலக்கு வரை நடந்த இப்பணியில் நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் அருகே சுமார் 20 மீ., துாரத்திற்கு சென்டர் மீடியனை உயர்த்தவில்லை. இதனால் உயரம் குறைந்த அப்பகுதியில் டூவீலரில் வருவோர் எதிரே வரும் வாகனங்களை கவனிக்காமல் ரோட்டை கடப்பது தொடர்கிறது. இதனால் விபத்து ஏற்படுகிறது. மேலும், ரோடு கடப்பதற்கான இடங்கள் பற்றிய அறிவிப்பு தெளிவாக இல்லாததால் ரோட்டை கடக்க நினைப்பவர்கள் விபத்துக்களில் சிக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘அப்பகுதி குடியிருப்போர் ரோட்டை கடந்து செல்ல வசதியாக அந்த இடத்தில் சென்டர் மீடியனை உயர்த்த கூடாது என பணியை தடுத்தனர். ஆனால் புதிதாக ஒரு இடத்தில் பாதை அமைக்க முடியாது என்ற காரணத்தால் குறிப்பிட்ட பகுதியில் பணி நடைபெறவில்லை. விபத்துக்களை தடுக்க போலீஸ் பாதுகாப்புடன் சென்டர் மீடியன்கள் அமைக்கப்படும் என்றனர்.