தடையின்மை சான்று பெற லஞ்சமா? தனியார் பள்ளிகள் புகார் அளிக்கலாம்

3

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு தடையின்மை சான்று, நிரந்தர அங்கீகாரம் மற்றும் தரம் உயர்த்த அனுமதி பெற்று தருவதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு தடையின்மை சான்று, நிரந்தர அங்கீகாரம் மற்றும் தரம் உயர்த்த அனுமதி பெற்று தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., செய்தித் தொடர்பு குழு துணை தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை விபரங்கள் மற்றும் வாக்குமூலங்கள் அடிப்படையில், பணம் வசூலிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கையும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் முழுமையான விபரங்களும் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. வழக்கில் முக்கிய குற்றவாளியான அரசகுமார் என்பவரை கைது செய்து உள்ளோம். பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர், சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement