எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கரும்பு வரத்து... குறைவு ! நஷ்டத்தில் இயங்குவதால் தொழிலாளர்கள் தவிப்பு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதால் போதிய பணி கிடைக்காமல் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1987ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு, கடலுார் மாவட்டம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் கரும்புகளை வெட்டி அரவைக்கு அனுப்பி அதிக லாபம் பெற்றனர்.
எம்.ஆர்.கே., சா்க்கரை ஆலையால் சேத்தியாத்தோப்பு பகுதிக்கென தனி அடையாளம் கிடைக்கப்பெற்று அப்பகுதி பெரும் வளர்ச்சியடைந்தது. லாபத்தில் இயங்கிய சர்க்கரை ஆலையில் நிர்வாக சீர்கேடு, கரும்பு அலுவலர்கள் விவசாயிகளிடம் சரியான அணுகுமுறை இல்லாதது, கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு தொகை வழங்குவதில் காலதாமதம் என, பல்வேறு காரணங்களால் கடந்த 15 ஆண்டுகளாகவே படிப்படியாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
கடந்த காலங்களில் 300க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் அரவை பருவத்தின் போது பணியமர்த்தப்பட்டு பணிகள் நடந்தது. கடந்த 2018ம் ஆண்டு 2 லட்சம் டன், 2019ம் ஆண்டு 2.50 ஆயிரம் டன், 2020ம் ஆண்டு 3 லட்சம் டன் கரும்பு அரவை பணிகள் நடந்தது.
இதன் மூலமாக ஆலை நஷ்டத்தில் இருந்து மீண்டது. 2021, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் புவனகிரி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில் 'பொக்கோ போயிங்' நோய் தாக்கத்தினால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு பதிலாக நெல்சாகுபடிக்கு மாறினர். கரும்பு விளைச்சல் குறைவு காரணமாக ஆலை ஒரு மாதம் கூட முழுமையாக இயங்காததால் ஆலை தொழிலாளர்களுக்கு போதிய பணி கிடைக்கவில்லை.
2021ம் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் ஆலையில் கூட்டுமின் உற்பத்தி தொழிற்சாலை துவங்கப்பட்டு கரும்பு மொலாசஸ் கொண்டு எத்தனால் ஆலையும் துவங்குவதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியது. ஆனால், ஆலை நஷ்டத்தில் இயங்குவதால் அப்பணியும் கிடப்பில் போடப்பட்டது.
சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு ஆர்வம் முற்றிலுமாக குறைந்து வருவதால் ஆலைக்கு கரும்பு வரத்தும் குறைந்துள்ளது. கடந்த காலங்களில் 2 லட்சம் டன் கரும்பு அரவைக்கு வந்த நிலையில், கடந்தாண்டு மொத்தம் 31 ஆயிரம் டன் மட்டுமே கரும்பு அரவைக்கு வந்தது.
இந்தாண்டு 20 ஆயிரம் டன் அளவிற்கு கரும்பு விளைச்சல் இல்லை என, விவசாயிகள் கூறுகின்றனர். இதனால், ஆலையில் அரவை பணிக்கு கரும்பு தட்டுப்பாடு நிலவுகிறது. கரும்பு விளைச்சல் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆலை மீண்டும் லாபத்தில் இயங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது ஆலையில் 50 ஆயிரம் டன் வரை இருப்பு உள்ளது. பற்றாக்குறைக்கு வெளி மாவட்ட ஆலைகளிலிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, அரவை பணி மேற்கொள்ளப்படும்' என்றனர்.