அமெரிக்காவில் வெள்ளத்தில் மூழ்கிய கார்; வம்சாவளி இந்தியர் பலி

கன்சாஸ்: அமெரிக்காவில் வெள்ள நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

வெங்கடேஷ் டொப்பலாடி (33) என்பவர் நெப்ராஸ்காவின் ஓமாஹாவில் வசித்து வருகிறார். இவரது பூர்வீகம் ஆந்திர பிரதேசம் ஆகும்.

அவர் காணாமல் போனதாக ஆந்திராவில் உள்ள குடும்பத்தினர், அமெரிக்காவில் வசிக்கும் போலீசாருக்கு தகவல் அனுப்பினர்.

இந் நிலையில், நேற்றைய தினம், கன்சாஸ் மாகாணத்தில் உள்ள பாலத்தின் மேற்கு பகுதியில் வெள்ள நீரில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதை அங்குள்ளவர்கள் கண்டனர். உடனடியாக இது குறித்து உள்ளூர் போலீசாருக்கும், மீட்புக் குழுவிற்கும் தகவல் அனுப்பினர்.

சம்பவ பகுதிக்கு வந்த அவர்கள் மீட்பு பணிகளை தொடங்கினர். காரை கண்டெடுத்த மீட்புக் குழுவினர் அதனுள்ளே யாரும் இல்லாததை கண்டனர்.

அதன் பின்னர் வெங்கடேஷ் காணாமல் போன விவரம் போலீசாருக்கு தெரிய வர, மீண்டும் தீவிரமாக தேடினர். கன்சாஸ் நெடுஞ்சாலை ரோந்து மற்றும் வான்வழிப்பிரிவு படையினர் ட்ரோன் உதவியுடன் தேடுதலை தொடர்ந்தனர்.

பலகட்ட தேடுதல் பணிகளுக்கு பின்னர் காரை ஓட்டியவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது காணாமல் போன வெங்கடேஷ் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. கன்சாஸ் மாகாணத்தில் தொடர் மழையின் போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த தருணத்தில் அவர் ஏன் காரில் அங்கு சென்றார் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

இதுகுறித்து வெங்கடேஷ் நண்பர்கள் தரப்பு கூறுகையில்," அவர் கன்சாஸ் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஹூஸ்டனில் இருந்து சென்று கொண்டிருந்த போது சுங்கக்கட்டணம் இல்லாத வழியை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

வெலிங்கடனுக்கு அருகில் உள்ள உள்ளூர் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வெள்ள நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்றனர்.

Advertisement