காலிறுதியில் இந்திய ஜோடி * யு.எஸ்., ஸ்மாஷ் டேபிள் டென்னிசில்

லாஸ் ஏஞ்சல்ஸ்: யு.எஸ்., ஸ்மாஷ் தொடரில் இந்தியாவின் ஆண், பெண்கள் ஜோடி காலிறுதிக்கு முன்னேறின.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் டபிள்யு.டி.டி., சார்பில் யு.எஸ்., ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மானவ் தாக்கர், மனுஷ் ஷா ஜோடி, ஜப்பானின் மட்சுகே, சுன்சுகே ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 3-1 என்ற (8-11, 11-8, 11-8, 11-7) செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தியா, யாஷஸ்வினி ஜோடி, சீன தைபேவின் செங் ஐ சிங், யே இ-தியான் ஜோடியை சந்தித்தது. இதில் போராடிய இந்திய ஜோடி 3-2 என்ற (11-13, 12-10, 11-4, 6-11, 11-7) செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தியா, மனுஷ் ஜோடி 1-3 என்ற (11-9, 6-11, 4-11, 8-11) கணக்கில் அமெரிக்காவின் ஜிஷான், சாலி ஜோடியிடம் தோற்றது.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மானவ் தாக்கர், 0-3 (11-3, 11-5, 11-9) என சீனாவின் வாங் சுகினிடம் தோல்வியடைந்தார்.

Advertisement