உதவி பேராசிரியர் தேர்வு ரத்து செய்யப்படுமா? வாரியத்திடம் கவுரவ விரிவுரையாளர்கள் மனு
சென்னை: 'உதவி பேராசிரியர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 8,000க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல் கட்டமாக, 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த டிச., 27ம் தேதி நடந்தது; 42,064 பேர் எழுதினர்.
முதல் கட்டமாக, ஐந்து பாடப்பிரிவுகளுக்கான முடிவுகள், கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன. மீதமுள்ள, 56 பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள், கடந்த 25ம் தேதி வெளியாகின.
இந்த தேர்வு முடிவில், மதிப்பெண் வழங்கியதில் குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது, தேர்வு முடிவில், கட்டுரை வினாக்களுக்கு பதில் அளித்தவர்களில் பலருக்கு, 50 மதிப்பெண்ணுக்கு பூஜ்ஜியமும், மேலும் பலருக்கு, 50க்கு 49 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது; இது, தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது அடங்குவதற்குள், அடுத்த பூகம்பம் கிளம்பியது. ஆங்கில பாடத் தேர்வு முடிவில், சில தேர்வர்களின் மதிப்பெண்கள், மஞ்சள், நீலம் உள்ளிட்ட வண்ண நிறங்களால் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாக, கவுரவ விரிவுரையாளர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தியை, தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர்.
அப்போது, 'உதவி பேராசிரியர் போட்டித் தேர்வை ரத்து செய்து, புதிய தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும்' என, மனு அளித்தனர். இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் கூறியதாவது:
உதவி பேராசிரியர் போட்டித் தேர்வில், சில முறைகேடுகள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. சில நிகழ்வுகள், விடைத்தாள் மதிப்பீட்டாளர்களின் அஜாக்கிரதையால் நடந்துள்ளன. இதனால், 30 மதிப்பெண் கிடைக்கும் என, எதிர் பார்க்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் தவறுகளால் குறைந்த மதிப்பெண் கிடைத்துள்ளது. அவர்கள் தரவரிசையில் பின்தங்கும் சூழல் உள்ளது.
இருப்பினும் இதற்கு, விடைத்தாள் மதிப்பீட்டாளர்களே பொறுப்பு என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவிக்கிறது. தமிழ் பாடத்தில் தேர்வெழுதிய ஒருவருக்கு, அனுமதி கடிதம் பெயர் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. பெயர் இருக்கும் இடத்தில், பதிவு எண் குறிப் பிடப்பட்டுள்ளது.
அவர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். பெயர் இல்லாமலேயே தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது; இது, தவறான செயல். இவ்வாறு அவர் கூறினார்.
இது திட்டமிட்ட முறைகேடு
பா.ம.க., தலைவர் அன்புமணி: ஆயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் போக்க வேண்டும். உதவி பேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகளில், அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுவது, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அழகல்ல.
வி.சி.க., தலைவர் திருமாவளவன்: முனைவர் பட்டம் பெற்றவர்கள், பூஜ்ஜியம் மதிப்பெண் பெறும் அளவிற்கு தேர்வு எழுதி இருப்பரா என்பது நம்பக்கூடியதாக இல்லை. இந்த முறைகேடு, உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாக தோன்றவில்லை. மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாக உள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி, வண்ண அடையாளக் குறியீடு குளறுபடி என வரும் புகார்கள், மிகப்பெரும் முறைகேடு நடைபெற்றிருக்கக் கூடுமோ எனும் சந்தேகத்தை கிளப்புகிறது.
@block_B@
மதிப்பெண் குளறுபடி விவகாரம் தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அரசாணையின்படியே விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அரசாணையின்படி, ஒரு தேர்வரின் விடைத்தாளை, இரண்டு பேராசிரியர்கள் மதிப்பீடு செய்வர். அதில் ஒருவர் 25 மதிப்பெண்ணும், மற்றொருவர், 20 மதிப்பெண்ணும் வழங்கினால், அதிகபட்சம் 5 மதிப்பெண் வித்தியாசம் இருந்தால், மூன்றாவதாக, இரண்டு பேர் கொண்ட குழு, அந்த விடைத்தாளை மதிப்பீடு செய்யும். அவர்கள் வழங்கும் மதிப்பெண்ணே இறுதியானது.
இந்த மதிப்பெண்கள் சரியாக வழங்கப்பட்டு உள்ளனவா என்பதை சரிபார்க்கவே, தேர்வர்களுக்கு வண்ண நிறங்கள் தரப்பட்டன; அதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.block_B