கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவி கொலை

பீதர்: பக்கத்து வீட்டு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை தட்டிக்கேட்டதால், கணவரால் தாக்குதலுக்கு ஆளான மனைவி, நேற்று உயிரிழந்தார்.

பீதர் நகரின், ஹொன்னிகேரி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சனா, 26. இவருக்கும் பீதர் நகரின், சிவநகரில் வசிக்கும் பகவத் ஞானேஸ்வர், 30, என்பவருக்கும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. தம்பதி சிவநகரில் வசிக்கின்றனர்.

பகவத் ஞானேந்தர், இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு, பக்கத்து வீட்டு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த சஞ்சனா, கணவரிடம் கேள்வி எழுப்பியதால், தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

கோபமடைந்த பகவத் ஞானேஸ்வர், மனைவியை கோவிலுக்கு செல்லலாம் என கூறி, ஜூன் 25ம் தேதியன்று, பால்கி தாலுகாவின், காயமுகா கோவில் அருகில் உள்ள வனப்பகுதிக்கு, அழைத்து சென்றார். இரும்பு ராடால் மனைவியின் தலை, கழுத்தில் பலமாக தாக்கினார்.

பலத்த காயமடைந்த சஞ்சனா, பீதரின் பிரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று காலை அவர் உயிரிழந்தார்.

இது குறித்து, தன்னுாரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி விசாரணை நடக்கிறது.

Advertisement