செருப்பு வீசப்பட்ட விவகாரத்தில் சித்து முன் பிரதீப் ஈஸ்வர் கண்ணீர்

பெங்களூரு: தன்னை நோக்கி செருப்பு வீசப்பட்ட விவகாரத்தில், முன்னாள் முதல்வர் சித்தராமையா முன், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியை விமர்சித்து பேசியதாக, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரை நோக்கி, கடந்த, 27ம் தேதி ம.ஜ.த., தொண்டர்கள் செருப்பு வீசினர்.

இதுதொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை, பிரதீப் ஈஸ்வர் நேற்று சந்தித்தார்.

சிக்கபல்லாபூரில் நடந்த பிரச்னை குறித்து எடுத்து கூறினார்.

தன்னை நோக்கி செருப்பு வீசியதுடன், தன் குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசி, ம.ஜ.த.,வினர் திட்டினர் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த சித்தராமையா, பிரதீப் ஈஸ்வரை சமாதானப்படுத்தினார். 'உன்னுடன் நான் இருக்கிறேன்; எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம்' என, தைரியம் அளித்துள்ளார்.

பின், உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேயை தொடர்பு கொண்டு, பிரதீப் ஈஸ்வரை நோக்கி செருப்பு வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இதற்கிடையே, முதல்வர் சிவகுமாரும், பிரதீப் ஈஸ்வரிடம் மொபைல் போனில் பேசி, அவருக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், இரு சமூகத்தினர் இடையே பிரச்னையை துாண்டிவிடும் வகையில் பேசியதாக, பிரதீப்ஈஸ்வர் மீது, ம.ஜ.த.,வினரும் போலீசில் புகார் செய்துள்ளனர்.

Advertisement