அண்ணாமலை பக்கம் பா.ஜ.,வினர் போனது ஏன்? மத்திய அமைச்சர் நிர்மலா விசாரணை

40

சென்னை: 'அண்ணாமலைக்கு ஆதரவாக, பா.ஜ., நிர்வாகிகள் சென்றது ஏன்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, சட்டசபை தேர்தலுக்கு பின், அக்கட்சியில் இருந்து விலகி, 'வீ தி லீடர்' என்ற புதிய அமைப்பை தொடங்கினார். இதைத் தொடர்ந்து, மாநில மற்றும் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், அண்ணாமலையுடன் கைகோர்த்தனர்.

குறிப்பாக, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலர் சுமதி வெங்கடேசன், கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன் உட்பட பல நிர்வாகிகள், பா.ஜ.,வில் இருந்து விலகி, அண்ணாமலை அமைப்பில் இணைந்தனர்.

அதிருப்தி



இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்தார். அப்போது, தமிழக அரசியல் சூழல் குறித்து, மாநில நிர்வாகிகளிடம் ஆலோசித்தார்.

அதன்பின், மாநில நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்தார். அப்போது, 'அண்ணாமலை பற்றி நாம் பேச வேண்டாம். ஆனால், அவர் தனி அமைப்பு தொடங்கியதும், பா.ஜ.,வில் பல ஆண்டுகளாக பயணித்த நிர்வாகிகள் சென்றது ஏன்; யார் யார் சென்றனர்' என்ற, விபரங்களை கேட்டுள்ளார்.

அப்போது, மாநில நிர்வாகிகள் பலர், 'அண்ணாமலையின் செயல்பாடுகள் பிடித்ததால், அவர் அமைப்பில் இணைந்துள்ளனர். சிலர், கட்சி தலைமை, மாவட்ட தலைமை மீதான அதிருப்தியால், அவருடன் சென்றுள்ளனர்' என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், மாநில நிர்வாகிகள் பலர், தங்களின் கோரிக்கைகளையும், கட்சியில் தங்களுக்கு நிகழும் இடர்ப்பாடுகள் குறித்தும் அவரிடம் விவரித்து உள்ளனர்.

இந்த விபரங்களை, பா.ஜ., தலைமையிடம் நிர்மலா சீதாராமன் கூறுவார் என்றும், விரைவில், தமிழக பா.ஜ.,வில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும், தமிழக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

@block_B@

சமரசம் பேசும் பா.ஜ.,



பா.ஜ.,வில் இருந்து விலகி, 'வீ தி லீடர்' அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலையுடன், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் போனில் பேசி இருக்கிறார். அப்போது, 'உங்கள் வலிமை, தலைமைக்கு நன்றாகவே தெரியும். ஆனால், யார் இல்லையென்றாலும் கட்சி நடக்கும் என்று தலைமை எண்ணுவது இயல்பு. எனவே தான், நீங்கள் வெளியேற நினைத்தபோது, தலைமை தடை போடவில்லை.

நீங்கள் தனியாக செயல்பட்டால் யாருக்குமே சாதகமில்லை. மீண்டும் பா.ஜ.,வுக்கு வந்தால், தலைமையிடம் நானே பேசுகிறேன்' என சமரசம் செய்திருக்கிறார். ஆனால், அண்ணாமலையோ, 'இனி திரும்பி வர முடியாது. நல்லதோ கெட்டதோ, இப்படியே பயணிக்கிறேன்' என மறுப்பு தெரிவித்து விட்டார்.block_B

@block_Y@

அமெரிக்க பயணம்



அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் செயல்படும் வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவையும், நியூஜெர்சி நகர தமிழ் பேரவையும் இணைந்து, 39வது தமிழ் விழாவை ஜூலையில் ஏற்பாடு செய்துள்ளன. நியூஜெர்சி கன்வென்ஷன் மையத்தில், ஜூலை 2, 3, 4ம் தேதிகளில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதற்காக, அண்ணாமலை நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா சென்று வந்த பின், வீ தி லீடர் அமைப்பின் சார்பாக மொபைல் போன் செயலியை வெளியிட உள்ளார்.block_Y

Advertisement