நிறைவடையும் தருவாயில் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!

3


புதுடில்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் உள்ளது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஜெர்ஜியோ கோர் தெரிவித்தார்.

இது குறித்து அமெரிக்க தூதர் ஜெர்ஜியோ கோர் கூறியதாவது: அமெரிக்கா- இந்தியா ஆகிய இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் ஒரு கூட்டணியை அமைப்பதில் அதிபர் டிரம்ப் அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் பெரும்பகுதி முடிந்துவிட்டது. இறுதி செய்வதில் பேச்சுவார்த்தை யாளர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவை மிகவும் பிரியமான இடத்தில் அதிபர் டிரம்ப் வைத்திருக்கிறார்.

ஒரு நாள் அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியாவிற்கு வந்து, எங்களை பார்க்க வருவார் என்று நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஏஐ தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை என எதுவாக இருந்தாலும் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகள் இணைந்து செயல்படுவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அதனை நான் பயன்படுத்திக் கொண்டு இரு தரப்பினரையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். இது இரு தரப்பினருக்கும் வெற்றி தரும் ஒரு சூழ்நிலையாக அமையும்.

அமெரிக்கா- இந்தியாவுடன் கைகோர்த்து செயல்பட விரும்புகிறது. உலகில் உள்ள வேறு எந்த ஒரு நாட்டையும் விட, இந்தியா தொடர்ந்து அமெரிக்காவிற்கு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவின் மீது அமெரிக்கா நிறுவனங்களின் நம்பிக்கை வரலாற்று உச்சத்தை எட்டி உள்ளது.

இந்தியா ஒரு நம்பகமான பங்காளியாக கருதி, அமெரிக்க அரசு அதன் மீது முழு நம்பிக்கை கொண்டு உள்ளது. ஒரு அமெரிக்க நிறுவனம் கூட என்னை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? சட்டங்கள் ஏதும் மாறுமா? இங்குள்ள வரி அமைப்பு பாதுகாப்பானதா? 6 மாதங்களில் யாராவது வந்து எங்களை மிரட்டி பணம் பறிப்பார்களா? என்று கேட்பதில்லை. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை நம்புகிறது.

நாங்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறோம். அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. ஏஐ தொழில்நுட்பம், விமான போக்குவரத்து என எந்த துறையை தேர்ந்து எடுத்தாலும் நாம் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனை நாம் பயன்படுத்தி, அடுத்த 10 ஆண்டுகளுக்கான அடித் தளத்தை அமைப்போம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ஜெர்ஜியோ கோர் கூறினார்.

Advertisement