தண்ணீர் பற்றாக்குறையால் கரும்பு விவசாயிகள் தவிப்பு: வறட்சியால் பாசன கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது
தியாகதுருகம்: பருவமழை தொடர்ந்து ஏமாற்றுவதாலும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாகவும் பாசன கிணறுகளில்நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெற்பயிருக்கு அடுத்தபடியாக கரும்பு சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. கரும்பு ஆண்டு பயிர் என்பதால் பராமரிப்பு செய்வது எளிதாக உள்ளது. ஒருமுறை நடவு செய்த கரும்பு நாற்றுகள் வளர்ந்து அறுவடை செய்த பின் குறைந்தது 4 முறை மருதாம்பு முறையில் வளர்த்து அறுவடை செய்து லாபம் ஈட்ட முடியும்.
இதனால் நடவு பணிக்காக ஆண்டுதோறும் புதிய முதலீடு செய்யத் தேவையில்லை. அதேபோல் ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை செய்து நிகர லாபம் ஈட்ட முடியும். இதற்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்தாலே வளர்ந்து அதிக மகசூலை கொடுக்கும்.
இதன் காரணமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. தகுந்த பருவத்தில் கரும்பு அறுவடை செய்து சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கச்சிராயபாளையம் மற்றும் மூங்கில்துறைப்பட்டில் 2 கூட்டுறவு சர்க்கரை ஆலையும், திருக்கோவிலுார் அருகே வேங்கூரில் ஒரு தனியார் சர்க்கரை ஆலையும் அமைந்துள்ளது. கரும்பு பயிரை பொறுத்தவரை ஆண்டுதோறும் தண்ணீர் பாய்ச்சி பாதுகாக்க வேண்டி இருப்பதால் பாசன கிணறுகளில் உள்ள தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது.
இதற்கு பருவமழை சராசரி அளவு பெய்து நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைத்து நிரம்பினால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் தக்க வைக்கப்படும்.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஓரளவு கை கொடுத்த நிலையில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் ஏமாற்றியது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பாமல் போனது.
இந்நிலையில் 'எல் நினோ' பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை மிக தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும் இதுவரை எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.
இதனால் மாவட்டத்தில் உள்ள 80 சதவீதம் ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்த மழை பெய்யாமல் நிலத்தடி நீர்மட்டம் உயர வழியின்றி படிப்படியாக குறைந்து வருகிறது.
கோடை காலம் முடிந்து ஒருமாதம் ஆகியும் இன்னும் வெயிலின் தாக்கம் குறையாமல் சுட்டெரிக்கிறது. கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மாலை நேரத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்யும் சூழல் உருவானாலும் வெறும் துாறலோடு நின்று விடுகிறது. கடந்த 2 மாதங்களாக மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னை உள்ளதால் கிடைக்கும் தண்ணீரை பயிருக்கு பாய்ச்ச முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இதனால் நள்ளிரவிலும் உயிருக்கு ஆபத்தான சூழலில் வயலில் தங்கி மும்முனை மின்சாரம் வரும் வரை காத்திருந்தது தண்ணீர் பாய்ச்ச அவதிப்படுகின்றனர். பருவமழை ஏமாற்றுவது, தண்ணீர் பற்றாக்குறை, வெயிலின் தாக்கம், மின்தடை உள்ளிட்ட பிரச்னைகளால் கரும்பு விவசாயிகள் பயிரை காப்பாற்ற கடுமையாக போராட வேண்டி உள்ளது.
இது கரும்பு மகசூலை பெருமளவு பாதித்து நஷ்டத்தை ஏற்படுத்துமோ என்ற கவலையில் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும்
-
ஐஏஎஸ், ஐபிஎஸ் 2வது நாள் மாநாடு; முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை
-
அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு
-
இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக இயங்கும்; திருமா நம்பிக்கை
-
சொல்கிறார்கள்
-
தரங்கம்பாடி அருகே காதலர்கள் சடலமாக கண்டெடுப்பு; ஆணவக்கொலை என ஒரு தரப்பு புகார்
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 சரிவு