அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா: சட்டசபை செயலர் ஐகோர்ட்டில் பதில்

1

சென்னை: ' அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்தாலும், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள், சபாநாயகரால் தொடர்ந்து விசாரிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக சட்டசபை செயலர் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுவுக்கு சட்டசபை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவர் என, கூற முடியாது.

ராஜினாமா செய்தாலும், தகுதி நீக்க மனுக்கள், சபாநாயகரால் தொடர்ந்து விசாரிக்கப்படும். தகுதி நீக்க விசாரணையில் இறுதி முடிவு எட்டிய பிறகே நீதிமன்றங்கள் தலையிட முடியும்.

நான்கு எம்.எல்.ஏ.,க் களும் தாமாக முன்வந்து தங்கள் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதங்களை அளித்து உள்ளதால், அதன் உண்மை தன்மை குறித்து சந்தேகம் எழுப்ப, எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ஜூலை 13ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Advertisement