வறட்சியால் வெங்காய விளைச்சல் பாதிப்பு: தேவையை பூர்த்தி செய்யும் மைசூர் வெங்காயம்

ஆண்டிபட்டி;கடந்த சில மாதங்களாக வெயில் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி, அதிக காற்றால் தேனி மாவட்டத்தில் வெங்காய விளைச்சல் பாதித்துள்ளது.

மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் பகுதிகளில் வெங்காயம் விளைச்சல் அதிகம் உள்ளது. இப்பகுதிகளில் விளையும் வெங்காயம் மதுரை மார்க்கெட் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படும். வெங்காயம் நடவு செய்த 70 நாட்களில் அறுவடை செய்யலாம். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிக காற்று வீசுவதால் வெங்காய நடவை விவசாயிகள் தாமதப்படுத்தினர். மார்ச், ஏப்ரலில் நடவு செய்யப்படும் வெங்காயம் ஜூன், ஜூலையில் விற்பனைக்கு வந்துவிடும். இந்தாண்டு சாகுபடி பரப்பு குறைவால் தேனியில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மதுரை மார்க்கெட் மூலம் வரும் மைசூர் வெங்காயம் தற்போது தட்டுப்பாட்டை ஈடு செய்கிறது.

விலை ரூ.50 ஆக உயர்வு: வெங்காய வியாபாரிகள் சித்தயகவுண்டன்பட்டி ராமகிருஷ்ணன், ராஜகோபாலன்பட்டி முருகன் ஆகியோர் கூறியதாவது: தேனி மாவட்டத்திலிருந்து தினமும் 50 முதல் 75 டன் வரை வெங்காயம் மதுரை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படும். கடந்த சில வாரங்களில் மதுரைக்கு அனுப்பப்படும் வெங்காயத்தின் அளவு பாதியாக குறைந்து விட்டது. மதுரை மார்க்கெட்டில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மைசூர் வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. வெங்காயம் தட்டுப்பாட்டால் சில வாரங்களில் கிலோ ரூ.20 ல் இருந்து ரூ.50 வரை உயர்ந்துள்ளது.

மதுரைக்கு வரும் மைசூர் வெங்காயம் வியாபாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது. தேனி மாவட்டத்தில் தற்போது நடவு செய்யப்படும் வெங்காயம் இரு மாதங்களில் அறுவடைக்கு வந்தபின் மைசூர் வெங்காயத்தின் வரத்து குறைந்துவிடும் என்றனர்.

Advertisement