சபரிமலை தங்கம் திருட்டில் கூட்டுச் சதி; சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல்
திருவனந்தபுரம்: சபரிமலை துவாரபாலகர்கள் தங்க கவசத்தில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் கூட்டு சதியில் ஈடுபட்டதாக சிறப்பு புலனாய்வு குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் பிரசாந்த், தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரரு உள்ளிட்டோர் மீது புதிதாக வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, தொழிலதிபர் விஜய் மல்லையா தங்கம் தானமாக கொடுத்தார். அதை வைத்து, 1998ல் கோவில் மேற்கூரை, கதவுகள், இரு துவாரபாலகர் சிலைகள் தங்க கவசத்தால் வேயப்பட்டன.
கடந்த, 2019ல் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்த தங்க கவசத்தை கழற்றி, பராமரித்து தர அனுமதி கேட்டிருந்தார். அதற்கான செலவுகளை தானே ஏற்பதாகவும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, இரு துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்தும் தங்க கவசம் கழற்றப்பட்டு, பராமரிப்புக்காக சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பின் தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் துவாரபாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டன.
ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே தங்க முலாம் உருகி, உள்ளே செப்பு தகடுகள் இருப்பது தெரிந்ததால், மிகப் பெரிய அளவில் திருட்டு நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு, முக்கிய குற்றவாளியாக பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியை சேர்த்தது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, உயர் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த, 2019ல் தங்க முலாம் பூசுவதற்காக துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்து தங்க கவசங்கள் கழற்றப்பட்டன. அப்போது திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள், தங்க கவசங்களை மறைத்து உள்ளே இருப்பது செப்பு தகடுகள் தான் என்பதை உறுதி செய்வதற்கான ஆவணங்களை தயாரித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கவசங்களில் இருந்த பெரும்பாலான தங்கம் உருக்கி பிரித்து எடுக்கப்பட்டன. சந்தேகம் வராத அளவுக்கு மிக மெல்லிய அளவில் தங்க முலாம் பூசப்பட்டு, மீண்டும் சிலைகளில் பொருத்தப்பட்டன.
ஆனால், ஒரு சில ஆண்டுகளிலேயே, தங்க முலாம் பெயர்ந்து, உள்ளே இருக்கும் செப்பு தகடுகள் வெளியே தெரிந்தன. இதனால், பதறிப் போன தேவஸ்வம் போர்டு அதிகாரிகள், இந்த முறைகேட்டை மறைக்க, அவசர, அவசரமாக கடந்த ஆண்டு மீண்டும் தங்க கவசத்தை கழற்றி சென்னைக்கு கொண்டு செல்ல சதி திட்டம் தீட்டினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டுச் சதியில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் பிரசாந்த், சபரிமலை செயல் அதிகாரி முராரி பாபு, தங்க முலாம் பூச நிதியுதவி செய்ய முன்வந்த உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் சென்னையைச் சேர்ந்த, 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் பங்கஜ் பண்டாரி ஆகியோருக்கு முக்கியப் பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரரு, தேவஸ்வம் போர்டு உறுப்பினர் ஏ.அஜிகுமார், திருவாபரண கமிஷனர் ரெஜிலால் ஆகியோரது பெயர்களும் இடைக்கால அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இதை பரிசீலித்த கேரள உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது புதிதாக வழக்குப் பதிவு செய்து, இறுதி விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.