மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கும்மிடிப்பூண்டி, ஜூலை 2–
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, நேற்று கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில், ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி துணை மின் நிலைய வளாகத்தில், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள், நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 75க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள் கூறியதாவது:
கடந்த 16 ஆண்டுகளாக, மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறோம். மின் வாரியம் சார்பில் செயல்படுத்தப்படும் பெரும்பாலான களப்பணிகளில், நாங்கள் தான் ஈடுபட்டு வருகிறோம்.
பேரிடர் காலங்களில், உயிரை துச்சமாக நினைத்து, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க, அயராது வேலை செய்திருக்கிறோம்.
அரசு வழங்கும் குறைந்த ஊதியத்தால், குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். உடனடியாக எங்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.