ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தமிழக அரசு: சீமான் கண்டனம்

1

சென்னை: ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்கு தமிழக அரசு தாரை வார்ப்பதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 2025ம் ஆண்டு நவ.25ம் தேதி தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழகத்தின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் லாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.

இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 ஹெக்டேர் நிலப்பரப்பில் 228.352 ஹெக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.

எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்த திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.

இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.

Advertisement