காய்கறி, பழங்கள் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: பெண்கள் உட்பட 4 பேர் காயம்
திருவேற்காடு: கோயம்பேடு சந்தையில் இருந்து காய்கறி, பழங்கள் ஏற்றி சென்ற சரக்கு வாகனம், வேலப்பன்சாவடி மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
கோயம்பேடு சந்தையில் இருந்து பழங்கள், காய்கறிகள் வாங்கி கொண்டு, 'பொலிரோ பிக்கப்' சரக்கு வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி வியாபாரிகள் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை, அண்ணா நகரைச் சேர்ந்த லோகநாதன், 42 என்பவர் ஓட்டினார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை வேலப்பன்சாவடி மேம்பாலத்தில் சென்றபோது, 'ஐச்சர்' வாகனம் ஒன்று, இவர்களது வாகனத்தில் உரசி சென்றது. இதில், கட்டுப்பாட்டை இழந்த லோகநாதனின் சரக்கு வாகனம், சாலையின் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், வாகனத்தில் ஏற்றி வந்த காய்கறி மூட்டைகள், தக்காளி மற்றும் பழ மூட்டைகள் சாலையில் சிதறின.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி காயமடைந்த திருவள்ளூரைச் சேர்ந்த வியாபாரிகள் சுப்பிரமணி, 55, அன்பழகன், 49, வனிதா, 38 மற்றும் கலா, 48 ஆகியோரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், 'கிரேன்' வாகனத்தை வரவழைத்து வாகனத்தை அப்புறப்படுத்தினர்
மேலும், காய்கறி மற்றும் பழ மூட்டைகள் வெகு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.